Sunday, 8 November 2020

Thiruveethi varuginran

 பாடல் : திருவீதி வருகின்றான் 

ராகம் : ரீதிகௌள

தாளம் : ஆதி 


பல்லவி 

திருவீதி வருகின்றான் எந்தன் 

மனவீதி வருகின்றான் ராமன் (திருவீதி) 

அனுபல்லவி 

மிதிலையின் வீதியில் ஜனகன் மகளைக் கண்டு 

முறுவலுடன் அவள் திருமுகம் நினைந்து கொண்டு 

(திருவீதி)

சரணம் - 1

வில்வலிமை அறிந்து அவள் 

விழிவலிமையைக் கொண்டு

சுயம்வரம் வென்றவன் என் 

மனதையும் வென்றவன் (திருவீதி)

சரணம் - 2

ஒருமாது ஒருசொல் 

ஒரு செயல் என்று 

பெருமையுடன் இந்த 

நிலமிசை வாழ்ந்தவன்  (திருவீதி)

சரணம் - 3

சரணம் சரணம் என்று 

திருவடி பணிந்தவரை 

அருகழைத்து இருத்தி 

கருணை புரிந்தவன் (திருவீதி)

சரணம் - 4

ஒரு முறையே அவன் 

திருநாமம் உரைக்க 

பிறவிப்பிணி அகற்றி 

திருவருள் செய்பவன்  (திருவீதி)



Ninaitha vaazhvu tharum

 பாடல் : நினைத்த வாழ்வு தரும் நித்யகல்யாணி 

ராகம் : தோடி 

தாளம் : ஆதி 


பல்லவி 

நினைத்த வாழ்வு தரும் நித்யகல்யாணி 

உனை நினைக்க வருவாய் இங்கு விரைந்தோடி 

(நினைத்த)


அனுபல்லவி 

அனிச்ச வாழ்வெனது அம்ருதவர்ஷிணி

இனி தழைத்திடவே வந்தெனைப் பாரினி

(நினைத்த)

சரணம் 

குனித்த புருவமும் செவ்வாயிதழ் கண்டு 

பனித்த விழிகளொடு உனைப் பணிந்தேனே 

இனித்ததென் வாயுமே நின்திருநாமத்தில் 

அனைத்தும் நீயெனப் பணிந்தேன் நின்திருப்பாதத்தில் 

(நினைத்த)


{சரணத்தை அடுத்து வரும் பல்லவி "நினைத்த வாழ்வு தரும்" என்ற வரி ஸ்வரப்ரஸ்தாரத்திற்கு உகந்தது.}


கனவிலே எழுதி மடித்த கவிதை

 ஆறுடைச் சடையனை 

நீறுடை நுதலனை 

ஏறுடைப் பதியினை 

பிறைகோடுடை விமலனை 

திருவை யாறடைந் துய்வமே! 


9, நவம்பர் 2019 அன்று கனவிலே எழுதி மடித்த வரிகள். 

கனவிலே எழுதி மடித்த கவிதை

 திரையாழி மேற்துயிலும் திருமாலே பெருமாளே 

ஒரு ஆழி கீழ்ப்பட்ட மறைமீட்ட பெருமாளே 

துயராழி தான்தீர்க்க தூண்பிளந்த பெருமாளே 

கணையாழி ஈந்தாங்கோர் உயிர்காத்த பெருமாளே 

ஒருஆழி கடந்தாங்கே சிறைமீட்ட பெருமாளே 

பிறவாழி யாம்கடக்க அருள்வாயெம் பெருமாளே!