Thursday, 20 September 2012

மழை வேண்டல் பாடல்கள்



1.129 திருக்கழுமலம்

பண் – மேகராகக் குறிஞ்சி

1383    சேவுயருந் திண்கொடியான் திருவடியே                                  1.129.1
                சரணென்று சிறந்தவன்பால்
        நாவியலும் மங்கையொடு நான்முகன்றான்
                வழிபட்ட நலங்கொள்கோயிற்
        வாவிதொறும் வண்கமலம் முகம்காட்டச்
                செங்குமுதம் வாய்கள்காட்டக்
        காவியிருங் கருங்குவளை கருநெய்தல்
                கண்காட்டுங் கழுமலமே.

பொழிப்புரை: விடை வடிவம் எழுதி உயர்த்திய வலிமையான கொடியையுடைய சிவபிரானின் திருவடிகளே நமக்குச் சரண் என்று நாவின்கண் பொருந்திய கலைமகளோடு வந்து நான்முகன் சிறந்த அன்போடு வழிபட்ட அழகிய கோயில்; வாவிகள்தோறும் மலரும் வளவிய தாமரை மலர்கள் மகளிர்தம் முகங்களையும் செங்கழுநீர் மலர்கள் ஆகியன கண்களையும் போலத் தோன்றி மலரும் கழுமலத்தின் கண் விளங்குவதாகும்.

1384    பெருந்தடங்கண் செந்துவர்வாய்ப் பீடுடைய                             1.129.2
                மலைச்செல்வி பிரியாமேனி
        அருந்தகைய சுண்ணவெண்ணீ றலங்கரித்தான்
                அமரர்தொழ வமருங்கோயில்
        தருந்தடக்கை முத்தழலோர் மனைகள்தொறும்
                இறைவனது தன்மைபாடிக்
        கருந்தடங்கண் ணார்கழல்பந் தம்மானைப்
                பாட்டயருங் கழுமலமே.

பொழிப்புரை: அகன்ற விழிகளையும், பவளம் போலச் சிவந்த வாயையுமுடைய பெருமைமிக்க மலைமகளாகிய உமையம்மை பிரியாத திருமேனியில், அருமையான திருவெண்ணீற்றுப் பொடியை அழகுறப் பூசிய சிவபிரான் தேவர்கள் தன்னை வணங்க எழுந்தருளியுள்ள திருக்கோயில், வள்ளன்மையோடு விளங்கும் நீண்ட கைகளையுடைய, முத்தீ வேட்கும் அந்தணர்களின் வீடுகள்தோறும் கரியவான பெரிய கண்களையுடைய மகளிர் இறைவனுடைய இயல்புகளைக் கூறிக்கொண்டு, கழற்சிக்காய் அம்மானைப் பந்து ஆகியன ஆடி மகிழும் கழுமல நகரின்கண் உள்ளது.
  
1385    அலங்கல்மலி வானவருந் தானவரும்                                    1.129.3
                அலைகடலைக் கடையப்பூதங்
        கலங்கவெழு கடுவிடமுண் டிருண்டமணி
                கண்ட்த்தோன் கருதுங்கோயில்
        விலங்கமர் புயன்மறந்து மீன்சனிபுக்
                கூன்சலிக்குங் காலத்தானுங்
        கலங்கலிலா மனப்பெருவண் கையுடைய
                மெய்யர்வாழ் கழுமலமே.

பொழிப்புரை: மலர்மாலை அணிந்த தேவர்களும் அசுரர்களும் கூடி அலைகள் பொருந்திய திருப்பாற்கடலைக் கடைந்தபோது, பூதங்களும் கலங்குமாறு எழுந்த கொடிய நஞ்சை, அவர்களைக் காத்தற்பொருட்டுத் தானுண்டு, கரிய மணி போன்ற மிடற்றினனாகிய சிவபிரான், தனது உறைவிடம் என்று மகிழ்வோடு நினையும் கோயில்; மலைகள்மீது தங்கி மழைபொழியும் மேகங்கள் மழை பொழிவதை மறத்தற்குரியதான மகர ராசியில் சனி புகுந்து உணவு கிடைக்காமல் மக்கள் உடல் இளைக்கும் பஞ்சகாலத்திலும், மனம் கலங்காது பெரிய வள்ளன்மையோடு மக்களைக் காக்கும் உண்மையாளர் வாழும் கழுமலத்தின்கண் உள்ளது.

1386    பாரிதனை நலிந்தமரர் பயமெய்தச்                                        1.129.4
                சயமெய்தும் பரிசுவெம்மைப்
        போரிசையும் புரமூன்றும் பொன்றவொரு
                சிலைவளைத்தோன் பொருந்துங்கோயில்
        வாரிசைமென் முலைமடவார் மாளிகையின்
                சூளிகைமேல் மகப்பாராட்டக்
        காரிசையும் விசும்பியங்குங் கணங்கேட்டு
                மகிழ்வெய்துங் கழுமலமே.

பொழிப்புரை: மண்ணுலக மக்களை வருத்தியும், தேவர்களை அஞ்சுமாறு செய்தும், வெற்றி பெறும் இயல்பினராய்க் கொடிய போரை நிகழ்த்தும் அவுணர்களின் முப்புரங்களும் அழிய ஒப்பற்ற வில்லை வளைத்த சிவபிரானுறையுங்கோயில்; கச்சணிந்த மென்மையான தனங்களையுடைய மகளிர் மாடவீடுகளினுச்சியில் நின்று தம் குழந்தைகளைப் பாடிப் பாராட்டுமிசையை, மேகங்கள் உலாவும் வானவெளியில் உலாவும் கந்தருவர்கள் கேட்டு மகிழும் கழுமல நகரில் உள்ளதாகும்.

1387    ஊர்கின்ற அரவமொளி விடுதிங்க                                        1.129.5
                ளொடுவன்னி மத்தமன்னும்
        நீர்நின்ற கங்கைநகு வெண்டலைசேர்
                செஞ்சடையான் நிகழுங்கோயில்
        ஏர்தங்கி மலர்நிலவி யிசைவெள்ளி
                மலையென்ன நிலவிநின்ற
        கார்வண்டின் கணங்களாற் கவின்பெருகு
                சுதைமாடக் கழுமலமே

பொழிப்புரை: ஊர்ந்து செல்லும் அரவு, ஒளிவிடும் திங்கள்; வன்னி, ஊமத்த மலர், நீர்வடிவான கங்கை, நகும் வெண்டலை ஆகியன சேர்ந்த செஞ்சடையையுடைய சிவபிரான் எழுந்தருளியுள்ள கோயில்; அழகு பொருந்திய வெள்ளி மலைகள் போல விளங்கி நிற்பனவும், மலர்களால் அலங்கரிக்கப்பெற்று, அவற்றை மொய்க்கும் கரிய வண்டுகளின் கணங்களால் சூழப்பெற்றுக் கவின்மிகு வனவுமாய வெண்மையான சுதையாலமைந்த மாடவீடுகள் நிறைந்த கழுமல நகரில் உள்ளது.

1388    தருஞ்சரதந் தந்தருளென் றடிநினைந்து                                  1.129.6
                தழலணைந்து தவங்கள்செய்த
        பெருஞ்சதுரர் பெயலர்க்கும் பீடார்தோ
                ழமையளித்த பெருமான்கோயில்
        அரிந்தவய லரவிந்த மதுவுகுப்ப
                அதுகுடித்துக் களித்துவாளை
        கருஞ்சகடம் இளகவளர் கரும்பிரிய
                அகம்பாயுங் கழுமலமே

பொழிப்புரை: மெய்ஞ்ஞானியருக்குத் தரும் உண்மை ஞானத்தை எங்கட்கும் தந்தருளென்று திருவடிகளை நினைந்து, தீ நடுவில் நின்று தவம் செய்யும் பெரிய சதுரப்பாடுடையவர்கட்கும், மழை நீரில் நின்று தவமியற்றுபவர்கட்கும் பெருமைமிக்க தோழமையை வழங்கியருளும் சிவபிரானுறையும் கோயில்; நெல்லறுவடை செய்த வயலில் முளைத்த தாமரை மலர்கள் தேனைச் சொரிய, அதனைக் குடித்துக் களித்த வாளை மீன்கள் வயற்கரைகளில் நிற்கும் பெரிய வண்டிகள் நிலைபெயரவும், கரும்புகள் ஒடியவும் துள்ளிப்பாயும் கழுமல வளநகரிலுள்ளதாகும்.

1389    புவிமுதலைம் பூதமாய்ப் புலனைந்தாய்                                   1.129.7
                நிலனைந்தாய்க் கரணம்நான்காய்
        அவையவைசேர் பயனுருவா யல்லவுரு
                வாய்நின்றான் அமருங்கோயில்
        தவமுயல்வோர் மலர்பறிப்பத் தாழவிடு
                கொம்புதைப்பக் கொக்கின்காய்கள்
        கவணெறிகற் போற்சுனையின் கரைசேரப்
                புள்ளிரியுங் கழுமலமே

பொழிப்புரை: மண், புனல் முதலிய பூதங்கள் ஐந்து, சுவை, ஒளி முதலிய புலன்கள், அவற்றுக்கு இடமாகிய மெய் ஐந்து, வாய் முதலிய பொறிகளைந்து, வாக்கு, புத்தி முதலிய உட்கருவிகள், மனம், பாதம் முதலிய செய்கருவிகளைந்து, நான்காகிய ஆன்ம தத்துவங்களாகவும், அவற்றின் பயனாகவும், உருவமாகவும், அருவமாகவும் நிற்கின்ற சிவபிரான் எழுந்தருளிய கோயில், தவஞ்செய்ய முயல்வோர் இறைவனை அர்ச்சிக்க மரங்களில் பூத்த மலர்களைப் பறித்துக் கொண்டு, விடுத்த கொம்புகள் நிமிர்ந்து தாக்குதலால் மாமரத்தில் காய்த்த காய்கள் விண்டு, கவணிலிருந்து வீசப்பட்ட கல்போல சுனைகளில் வீழ, ஆங்குறைந்த பறவைகளஞ்சியகலும் வளமான கழுமல வளநகரிலுள்ளதாகும்.


1390    அடல்வந்த வானவரை யழித்துலகு                                       1.129.8
                தெழித்துழலும் அரக்கர்கோமான்
        மிடல்வந்த இருபதுதோள் நெரியவிரல்
                பணிகொண்டோன் மேவுங்கோயில்
        நடவந்த உழவரிது நடவொணா
                வகைபரலாய்த் தென்றுதுன்று
        கடல்வந்த சங்கீன்ற முத்துவயற்
                கரைகுவிக்குங் கழுமலமே

பொழிப்புரை: வலிமை பொருந்திய தேவர்கள் பலரையழித்துலகையச்சுறுத்தித் திரிந்த அரக்கர் தலைவனாகிய இராவணனின் வலிமைமிக்க இருபது தோள்களையும் கால்விரலால் நெரியவூன்றி, அவனைப் பணிகொண்ட சிவபிரான் எழுந்தருளியுள்ள கோயிலையுடையது, நாற்று நடவந்த உழவர்கள் இவை நாற்று நடுவதற்கு இடையூறாய்ப் பரற்கற்கள் போலத் தோன்றுகின்றனவே என்று கூறுமாறு கடலின்கண் இருந்துவந்த சங்குகள், முத்துக்களை வயல்களிலீன்று குவிக்கும் கழுமலமாகும்.

1391    பூமகள்தன் கோனயனும் புள்ளினொடு                                   1.129.9
                கேழலுரு வாகிப்புக்கிட்
        டாமளவுஞ் சென்றுமுடி யடிகாணா
                வகைநின்றான் அமருங்கோயில்
        பாமருவும் கலைப்புலவோர் பன்மலர்கள்
                கொண்டணிந்து பரிசினாலே
        காமனைகள் பூரித்துக் களிகூர்ந்து
                நின்றேத்துங் கழுமலமே

பொழிப்புரை:திருமகளின் கேள்வனாகிய திருமாலும், நான்முகனும் பன்றி உருவம் எடுத்தும், அன்னப்பறவை வடிவமெடுத்தும் தேடப் புகுந்து, தம்மால் ஆமளவும் சென்று அடிமுடி காணாதவராய்த் தோற்று நிற்க, அழலுருவாய் ஓங்கி நின்ற சிவபிரான் எழுந்தருளிய கோயிலையுடையது, பல்வகைப் பாக்களில் அமைந்துள்ள அருங்கலைகளை அறிந்த புலவர்கள் பல மலர்களைக் கொண்டு அர்ச்சித்து நிறைவேறக் கண்டு கள முறையோடு விருப்பங்கள் களிகூர்ந்து போற்றும் கழுமல நகராகும்.

1392    குணமின்றிப் புத்தர்களும் பொய்த்தவத்தை                              1.129.10
                மெய்த்தவமாய் நின்றுகையில்
        உணல்மருவுஞ் சமணர்களு முணராத
                வகைநின்றான் உறையுங்கோயில்
        மணமருவும் வதுவையொலி விழவினொலி
                யிவையிசைய மண்மேல்தேவர்
        கணமருவும் மறையினொலி கீழ்ப்படுக்க
                மேல்படுக்குங் கழுமலமே

பொழிப்புரை: நற்குணங்கள் இல்லாத புத்தர்களும், பொய்த்தவத்தை மெய்த்தவமாய் எண்ணிக் கையில் உணவேற்றுண்டு வாழும் சமணர்களும் அறியமுடியாதவாறு நின்ற சிவபிரானுறையுங்கோயிலையுடையது. ஆடவர் பெண்டிரை மணக்கும் திருமணத்திலெழும் ஆரவாரமும், திருவிழாக்களின் ஓசையும், பூசுரர்களாகிய அந்தணர்கள் ஓதும் வேதவொலியை அடங்குமாறு செய்து, மிகுந்து ஒலிக்கும் கழுமல நகராகும்.

1393    கற்றவர்கள் பணிந்தேத்துங் கழுமலத்து                                   1.129.11
                ளீசன்றன் கழல்மேல்நல்லோர்
        நற்றுணையாம் பெருந்தன்மை ஞானசம்
                பந்தன்றான் நயந்துசொன்ன
        சொற்றுணையோ ரைந்தினொடைந் திவைவல்லார்
                தூமலராள் துணைவராகி
        முற்றுலக மதுவாண்டு முக்கணான்
                அடிசேர முயல்கின்றாரே

பொழிப்புரை: கற்றவர்களாலே பணிந்து வழிபடப்பெறும் கழுமலத்துள் விளங்கும் இறைவருடைய திருவடிகளின் மேல், நல்லோர்க்கு நற்றுணையாகும் பெருந்தன்மையையுடைய ஞானசம்பந்தன் விரும்பிப் போற்றிப் பாடிய, ஓதுவார்களுக்குத் துணையாயமைந்த சொற்களையுடைய இப்பதிகப் பாடல்கள் பத்தையும் வல்லவர், திருமகள் கேள்வராய், இவ்வுலகம் முழுவதையும் அரசாண்டு சிவனடி கூடும் முயற்சியைச் செய்கின்றவராவர்.

திருச்சிற்றம்பலம்

1.130 திருவையாறு
பண் - மேகராகக்குறிஞ்சி

1394    புலனைந்தும் பொறிகலங்கி நெறிமயங்கி                                 1.130.1
                அறிவழிந்திட் டைம்மேலுந்தி
        அலமந்த போதாக அஞ்சேலென்
                றருள்செய்வான் அமருங்கோயில்
        வலம்வந்த மடவார்கள் நடமாட
                முழவதிர மழையென்றஞ்சிச்
        சிலமந்தி யலமந்து மரமேறி
                முகில்பார்க்குந் திருவையாறே

பொழிப்புரை: ஐம்புலன்களும் தத்தம் பொறிகளைவிட்டு வழிமாறி அறிவழிந்து, கபம் மேற்பட் மனம் சுழன்று வருந்தும் இறுதிக் காலத்து, அஞ்சேல் என்றுரைத்து அருள் செய்பவனாகிய சிவபிரானமருங்கோயிலையுடையது, நடனக்கலையில் வெற்றியுற்ற பெண்கள் நடனமாட, அவ்வாடலுக்கேற்ற கூத்தொலிகளையெழுப்பும் முழவுகளதிர, அவற்றைக் கண்டு அஞ்சிய சில மந்திகள், வானத்தில் கேட்கும் இடியோசையோ என்றஞ்சி மனம் சுழன்று மரங்களிலேறி, மேகங்களைப் பார்க்கும் திருவையாறாகும்.

1395    விடலேறு படநாகம் அரைக்கசைத்து                                     1.130.2
                வெற்பரையன் பாவையோடும்
        அடலேறொன் றதுவேறி அஞ்சொலீர்
                பலியென்னு மடிகள்கோயில்
        கடலேறித் திரைமோதிக் காவிரியி
                னுடன்வந்து கங்குல்வைகித்
        திடலேறிச் சுரிசங்கஞ் செழுமுத்தங்
                கீன்றலைக்குந் திருவையாறே

பொழிப்புரை: கொல்லுதலாகிய குற்றம் பொருந்திய படத்தினையுடைய நாகத்தை இடையிற்கட்டி, மலையரையன் மகளாகிய பார்வதி தேவியோடு வலிமை பொருந்திய விடையேற்றின் மேலேறி, அழகிய சொற்களைப் பேசும் மகளிரே! பிச்சையிடுங்கள் என்று கேட்டுச் சென்ற சிவபிரானது கோயிலையுடையது, வளைந்த மூக்கினையுடைய கடற்சங்குகள் கடலினின்றும் அலை வழியாக அதில் பாயும் காவிரியோடு வந்து இரவின்கண் திடலிலேறித் தங்கிச் செழுமையான முத்துக்களை ஈன்று சஞ்சரிக்கும் திருவையாறாகும்.

1396    கங்காளர் கயிலாய மலையாளர்                                          1.130.3
                கானப்பே ராளர்மங்கை
        பங்காளர் திரிசூலப் படையாளர்
                விடையாளர் பயிலுங்கோயில்
        கொங்காளப் பொழில்நுழைந்து கூர்வாயால்
                இறகுலர்த்திக் கூதல்நீங்கி
        செங்கால்நன் வெண்குருகு பைங்கானல்
                இரைதேருந் திருவையாறே

பொழிப்புரை: சிறந்த பிரமன், திருமால் ஆகியோரின் முழு எலும்புக் கூட்டை அணிந்தவரும், கயிலாய மலையில் உறைபவரும், கானப்பேர் என்னும் தலத்தில் எழுந்தருளியவரும், மங்கை பங்கரும் முத்தலைச் சூலப்படை ஏந்தியவரும், விடை ஊர்தியை உடையவரும் ஆகிய சிவபிரானார் எழுந்தருளிய கோயிலை உடையது, சிவந்த கால்களையுடைய வெண்ணிறக் குருகுகள் தேன் நிறைந்த சோலைகளில் நுழைந்து கூரிய தம் அலகுகளால் தம் இறகுகளைக் கோதிக் குளிர் நீங்கிப் பசுமையான சோலைகளில் தமக்கு வேண்டும் இரைகளைத் தேடும் திருவையாறாகும்.

1397    ஊன்பாயு முடைதலைக்கொண் டூரூரின்                                1.130.4
                பலிக்குழல்வார் உமையாள்பங்கர்
        தான்பாயும் விடையேறுஞ் சங்கரனார்
                தழலுருவர் தங்குங்கோயில்
        மான்பாய வயலருகே மரமேறி
                மந்திபாய் மடுக்கள்தோறுந்
        தேன்பாய மீன்பாய செழுங்கமல
                மொட்டலருந் திருவையாறே

பொழிப்புரை: புலால் பொருந்தியதாய், முடைநாற்றமுடைத்தாய் உள்ள தலையோட்டைக் கையிலேந்தி, ஊர்கள்தோறும் பலியேற்றுழல்பவரும், உமைபாகரும், பாய்ந்து செல்லும் விடையேற்றை உடையவரும், நன்மைகளைச் செய்வதால் சங்கரன் என்ற பெயரையுடையவரும், தழலுருவினருமாகிய சிவபிரான் எழுந்தருளிய கோயிலையுடையது. மான் துள்ளித் திரிய, வயலருகேயுள்ள மரங்களிலேறி மந்திகள் பாய்வதால் மடுக்களில் தேன் பாய, அதனால் மீன்கள் துள்ளவும், செழுமையான தாமரை மொட்டுக்களலரவும், விளங்குவதாகிய திருவையாறாகும்.

1398    நீரோடும் கூவிளமும் நிலாமதியும்                                         1.130.5
                வெள்ளெருக்கும் நிறைந்தகொன்றைத்
        தாரோடு தண்கரந்தைச் சடைக்கணிந்த
                தத்துவனார் தங்குங்கோயில்
        காரோடி விசும்பளந்து கடிநாறும்
                பொழிலணைந்த கமழ்தார்வீதித்
        தேரோடும் அரங்கேறிச் சேயிழையார்
                நடம்பயிலுந் திருவையாறே

பொழிப்புரை: கங்கைநதி, வில்வம், பிறைமதி, வெள்ளெருக்கு, கொன்றை மலர் நிறைந்த மாலை, குளிர்ந்த கரந்தை ஆகியவற்றைச் சடையிங்கண் அணிந்த தத்துவனாகிய சிவபிரான் தங்கியுள்ள கோயிலையுடையது. மேகமண்டலம் வரை உயர்ந்து சென்று, வானத்தையளந்து மணம் பரப்பும் பொழில்கள் சூழ்ந்ததும், மணம் வீசும் வீடுகளையுடைய தேரோடும் வீதிகளில் அரங்குகளிலேறி அணிகலன்கள் புனைந்த இளம்பெண்கள் நடனம் ஆடுவதுமாகிய திருவையாறாகும்.

1399    வேந்தாகி விண்ணவர்க்கும் மண்ணவர்க்கும்                             1.130.6
                நெறிகாட்டும் விகிர்தனாகிப்
        பூந்தாம நறுங்கொன்றை சடைக்கணிந்த
                புண்ணியனார் நண்ணுங்கோயில்
        காந்தார மிசையமைத்துக் காரிகையார்
                பண்பாடக் கவினார்வீதித்
        தேந்தாமென் றரங்கேறிச் சேயிழையார்
                நடமாடுந் திருவையாறே

பொழிப்புரை: அனைத்துலகங்களுக்கும் வேந்தனாய், விண்ணவர்களுக்கும், மண்ணவர்களுக்கும் வழிகாட்டும் வள்ளலாய், மணங்கமழும் கொன்றை மாலையைச் சடையின்மிசை அணிந்தவனாய், புண்ணிய வடிவினனாய் விளங்கும் சிவபிரான் எழுந்தருளிய கோயிலையுடையது. மகளிர் காந்தாரப் பண்ணமைத்து இசைபாட, அழகிய இளம்பெண்கள் வீதிகளிலமைந்த அரங்கங்களில் ஏறி, தோம், தாம் என்ற ஒலிக்குறிப்போடு நடனமாடும் திருவையாறாகும்.

1400    நின்றுலா நெடுவிசும்பில் நெருக்கிவரு                                    1.130.7
                புரமூன்றும் நீள்வாயம்பு
        சென்றுலாம் படிதொட்ட சிலையாளி
                மலையாளி சேருங்கோயில்
        குன்றெலாங் குயில்கூவக் கொழும்பிரச
                மலர்பாய்ந்து வாசமல்கு
        தென்றலா ரடிவருடச் செழுங்கரும்பு
                கண்வளருந் திருவையாறே

பொழிப்புரை: நீண்ட வானவெளியில் நின்றுலவி, தேவர்கள் வாழ்விடங்களையழித்து வந்த முப்புரங்களையும், நீண்ட கூரிய அம்பு சென்றுலவும்படி கணை தொடுத்த வில்லாளியும், கயிலை மலை ஆளியுமாகிய சிவபிரான் சேர்ந்துறையும் கோயிலையுடையது. சிறுமலைகளில் குயில்கள் கூவவும், செழுமையான தேன் நிறைந்த மலர்களைத் தீண்டி மணம் மிகுந்து வருவதாகிய தென்றல் காற்று அடிவருடவும், அவற்றால் செழுமையான கரும்புகள் கண்வளரும் வளமுடைய திருவையாறாகும்.

1401    அஞ்சாதே கயிலாய மலையெடுத்த                                      1.130.8
                அரக்கர்கோன் தலைகள்பத்தும்
        மஞ்சாடு தோள்நெரிய அடர்த்தவனுக்  
                கருள்புரிந்த மைந்தர்கோயில்
        இஞ்சாயல் இளந்தெங்கின் பழம்வீழ
                இளமேதி இரிந்தங்கோடிச்
        செஞ்சாலிக் கதிருழக்கிச் செழுங்கமல
                வயல்படியுந் திருவையாறே

பொழிப்புரை: அஞ்சாமல் கயிலை மலையை எடுத்த அரக்கர் தலைவனாகிய இராவணனின் தலைகள் பத்தையும் வலிமை பொருந்திய அவன் தோள்களோடு நெரியுமாறு அடர்த்துப் பின் அவனுக்கருள் புரிந்த சிவபிரான் எழுந்தருளிய கோயிலையுடையது, இனிய தோற்றத்தையுடைய இளந்தென்னையில் காய்த்த நெற்று விழ, அதனைக் கண்டு அஞ்சிய எருமை இளங்கன்று அஞ்சி ஓடி செந்நெற்கதிர்களைக் காலால் மிதித்துச் செழுமையான தாமரைகள் களையாகப் பூத்த வயல்களில் படியும் திருவையாறாகும். (செஞ்சாலி-ஈனாக் கன்றாகிய எருமை)

1402    மேலோடி விசும்பணவி வியன்நிலத்தை                                  1.130.9
                மிகவகழ்ந்து மிக்குநாடும்
        மாலோடு நான்முகனு மறியாத
                வகைநின்றான் மன்னுங்கோயில்
        கோலோடக் கோல்வளையார் கூத்தாடக்
                குவிமுலையார் முகத்தினின்று
        சேலோடச் சிலையாடச் சேயிழையார்
                நடமாடுந் திருவையாறே

பொழிப்புரை: அன்னமாய் மேலே பறந்து சென்று வானத்தைக் கலந்தும், அகன்ற நிலத்தை ஆழமாக அகழ்ந்தும் முயற்சியோடு தேடிய நான்முகன், திருமால் ஆகியோர் அறிய முடியாதவாறு ஓங்கி நின்ற சிவபிரான் உறையும் கோயிலையுடையது. கூத்தர்கள் கையில் வைத்து ஆட்டும் அபிநயக் கோலுடன் திரண்ட வளையல்களை அணிந்த மகளிர் கூத்தாட, திரண்ட தனங்களையுடைய அச்சேயிழையார் முகத்தில் கண்களாகிய சேல்மீன்கள் பிறழவும், வில் போன்ற புருவங்கள் மேலும் கீழும் செல்லவும், நடனமாடும் திருவையாறாகும்.

1403    குண்டாடு குற்றுடுக்கைச் சமணரொடு                                    1.130.10
                சாக்கியருங் குணமொன்றில்லா
        மிண்டாடு மிண்டருரை கேளாதே
                யாளாமின் மேவித் தொண்டீர்
        எண்டோளர் முக்கண்ணர் எம்மீசர்
                இறைவரினி தமருங்கோயில்
        செண்டாடு புனல்பொன்னிச் செழுமணிகள்
                வந்தலைக்குந் திருவையாறே

பொழிப்புரை: இழிசெயல்களில் ஈடுபடுவோராய்ச் சிறிய ஆடையினராய்த் திரியும் சமணர்களும், சாக்கியர்களும் கூறும் நன்மை பயவாத சொற்களையும், வஞ்சனை பொருந்திய உரைகளையும் கேளாமல், தொண்டர்களே நீவிர் சிவபிரானையடைந்து அவருக்கு ஆட்படுவீர்களாக! எட்டுத் தோள்களையும், முக்குணங்களையும் உடைய எம் ஈசனாகிய இறைவன் இனிதாக எழுந்தருளியிருக்கும் கோயிலையுடையது, பூக்களைச் செண்டுகள் போல் உருட்டியாட்டிக் கொண்டு வரும் நீர் நிறைந்த காவிரி செழுமையான மணிகளைக் கரையில் கொண்டு வந்து சேர்க்கும் திருவையாறு என்னும் தலமாகும்.

1404    அன்னமலி பொழில்புடைசூழ் ஐயாற்றெம்                               1.130.11
                பெருமானை அந்தண்காழி
        மன்னியசீர் மறைநாவன் வளர்ஞான
                சம்பந்தன் மருவுபாடல்
        இன்னிசையா லிவைபத்தும் இசையுங்கால்
                ஈசனடி யேத்துவார்கள்
        தன்னிசையோ டமருலகில் தவநெறிசென்
                றெய்துவார் தாழாதன்றே

பொழிப்புரை: அன்னப் பறவைகள் நிறைந்த பொழில்கள் புடைசூழ்ந்து விளங்கும் திருவையாற்றுப் பெருமானை, அழகிய தண்மையான சீகாழிப் பதியில் வாழும் சிறப்புமிக்க, வேதங்கள் பயிலும் நாவினன் ஆகிய புகழ் வளரும் ஞானசம்பந்தன் போற்றிப் பாடிய பாடல்களாகிய இத்திருப்பதிகப் பாடல்கள் பத்தையும் ஓதி, ஈசனடியை ஏத்துபவர்கள் புகழோடு தவநெறியின் பயனாக விளங்கும் அமரர் உலகத்தைத் தாழாமல் பெறுவர்.

திருச்சிற்றம்பலம்

1.131 திருமுதுகுன்றம்

பண் – மேகராகக் குறிஞ்சி

1405    மெய்த்தாறு சுவையும் ஏழிசையும்                                         1.131.1
                எண்குணங்களும் விரும்பும்நால்வே
        தத்தாலும் அறிவொண்ணா நடைதெளியப்
                பளிங்கேபோல் அரிவைபாகம்
        ஒத்தாறு சமயங்கட் கொருதலைவன்
                கருதுமூர் உலவுதெண்ணீர்
        முத்தாறு வெதிருதிர நித்திலம்வா
                ரிக்கொழிக்கும் முதுகுன்றமே

பொழிப்புரை: மெய்யினால் அறியத்தக்கதாகிய ஆறு சுவைகள் ஏழிசைகள், எண்குணங்கள், எல்லோராலும் விரும்பப் பெறும் நான்கு வேதங்கள் ஆகியவற்றால் அறிய ஒண்ணாதவனும், அன்போடு நடத்தலால் தெளியப் பெறுபவனும், பளிங்கு போன்றவனும், உமையம்மையை ஒரு பாகமாக உடையவனும், ஆறு சமயங்களாலும் மாறுபாடின்றி ஏற்றுக் கொள்ளப் பெறும் ஒரே தலைவனுமாகிய சிவபிரான் விரும்பும் ஊர், தெளிந்த நீர் நிறைந்த மணிமுத்தாறு மலையின்கண் உள்ள மூங்கில்கள் உதிர்க்கும் முத்துக்களை வாரிக் கொணர்ந்து கரையிற் கொழிக்கும் திருமுதுகுன்றமாகும்.

1406    வேரிமிகு குழலியொடு வேடுவனாய்                                      1.131.2
                வெங்கானில் விசயன்மேவு
        போரின்மிகு பொறையளந்து பாசுபதம்
                புரிந்தளித்த புராணர்கோயில்
        காரின்மலி கடிபொழில்கள் கனிகள்பல
                மலருதிர்த்துக் கயமுயங்கி
        மூரிவளம் கிளர்தென்றல் திருமுன்றிற்
                புகுந்துலவு முதுகுன்றமே

பொழிப்புரை: தேன்மணம் மிகும் கூந்தலையுடைய உமையம்மையோடு வேட்டுவ உருவந்தாங்கி அருச்சுனன் தவம் புரியும் கொடிய கானகத்திற்குச் சென்று அவனோடு போருடற்றி, அவன் பொறுமையையளந்து, அவனுக்குப் பாசுபதக் கணையை விரும்பியளித்த பழையோனாகிய சிவபிரானுறையுங்கோயில், மழையால் செழித்த மணமுடைய சோலைகளில் கனிகளையும், பல மலர்களையும் உதிர்த்து, நீர் நிலைகளைப் பொருந்தி வலிய வளமுடைய தென்றல் காற்று அழகிய வீடுகள்தோறும் புகுந்துலவும் திருமுதுகுன்றமாகும்.

1407    தக்கனது பெருவேள்வி சந்திரனிந்                                        1.131.3
                திரனெச்சன் அருக்கன்அங்கி
        மிக்கவிதா தாவினொடும் விதிவழியே
                தண்டித்த விமலர்கோயில்
        கொக்கினிய கொழும்வருக்கைக் கதலிகமு
                குயர்தெங்கின் குவைகொள்சோலை
        முக்கனியின் சாறொழுகிச் சேறுலரா
                நீள்வயல்சூழ் முதுகுன்றமே

பொழிப்புரை: தக்கன் செய்த பெருவேள்வியில் சந்திரன், இந்திரன், எச்சன், சூரியன், அனலோன், பிரமன் முதலியவர்களை வீரபத்திரனைக் கொண்டு தண்டித்த விமலனாகிய சிவபெருமான் உறையும் கோயில், இனிய மாங்கனிகள், வளமான பலாக் கனிகள், வாழைக் கனிகள் ஆகிய முக்கனிகளின் சாறு ஒழுகிச் சேறு உலராத நீண்ட வயல்களும், குலைகளை உடைய கமுகு, தென்னை ஆகிய மரங்கள் நிறைந்த சோலைகளும் சூழ்ந்த திருமுதுகுன்றமாகும்.

1408    வெம்மைமிகு புரவாணர் மிகைசெய்ய                                    1.131.4
                விறலழிந்து விண்ணுளோர்கள்
        செம்மலரோன் இந்திரன்மால் சென்றிரப்பத்
                தேவர்களே தேரதாக
        மைம்மருவு மேருவிலு மாசுணநாண்
                அரியெரிகால் வாளியாக
        மும்மதிலும் நொடியளவிற் பொடிசெய்த
                முதல்வனிடம் முதுகுன்றமே

பொழிப்புரை: கொடுமை மிகுந்து, முப்புரங்களில் வாழும் அவுணர்கள் தீங்கு செய்ய, அதனால் தங்கள் வலிமையழிந்து தேவர்களும், பிரமனும், இந்திரனும், திருமாலும் சென்று தங்களைக் காத்தருளுமாறு வேண்ட, தேவர்களைத் தேராகவும், மேகங்கள் தவழும் உயர்ச்சியையுடைய மேருமலையை வில்லாகவும், வாசுகி என்னும் பாம்பை நாணாகவும், திருமால், அனலோன், வாயுவாகிய முத்தேவர்களையும் அம்பாகவும் கொண்டு அவுணர்களின் மும்மதில்களையும் ஒரு நொடிப்பொழுதில் பொடி செய்த தலைவனாகிய சிவபிரானது இடம், திருமுதுகுன்றமாகும்.

1409    இழைமேவு கலையல்குல் ஏந்திழையாள்                                 1.131.5
                ஒருபாலா யொருபாலெள்கா
        துழைமேவும் உரியுடுத்த ஒருவனிருப்
                பிடமென்பர் உம்பரோங்கு
        கழைமேவு மடமந்தி மழைகண்டு
                மகவினொடும் புகவொண்கல்லின்
        முழைமேவு மால்யானை இரைதேரும்
                வளர்சாரல் முதுகுன்றமே

பொழிப்புரை: மேகலையென்னும் அணிகலன் பொருந்திய அல்குலையும், அழகிய முத்துவடம் முதலியன அணிந்த மேனியையும் உடையவளாகிய உமையம்மையை ஒரு பாகமாகக் கொண்டு தனக்குரியதான ஒரு பாகத்தே மான்தோலை இகழாது உடுத்த ஒப்பற்றவனாகிய சிவபிரானது இருப்பிடம், ஊரின் நடுவே உயர்ந்த மூங்கில் மேல் ஏறியமர்ந்த மடமந்தி, மழை வருதலைக் கண்டு அஞ்சித் தன் குட்டியோடும் ஒலி சிறந்த மலைக்குகைகளில் ஒடுங்குவதும், பெரிய யானைகள் இரை தேர்ந்து திரிவதும் நிகழும் நீண்ட சாரலையுடைய திருமுதுகுன்றமாகும்.

1410    நகையார்வெண் டலைமாலை முடிக்கணிந்த                            1.131.6
                நாதனிடம் நன்முத்தாறு
        வகையாரும் வரைப்பண்டங் கொண்டிரண்டு
                கரையருகு மறியமோதி
        தகையாரும் வரம்பிடறிச் சாலிகழு
                நீர்க்குவளை சாயப்பாய்ந்து
        முகையார்செந் தாமரைகள் முகம்மலர
                வயல்தழுவு முதுகுன்றமே

பொழிப்புரை: சிரித்தலைப் பொருந்திய வெண்மையான தலைமாலையை முடியில் அணிந்துள்ள நாதனாகிய சிவபிரானது இடம், நல்ல மணிமுத்தாறு வகை வகையான மலைபடு பொருட்களைக் கொண்டு நெல், கழுநீர், குவளை ஆகியன சாயுமாறு பாய்ந்து வந்து, தாமரை மொட்டுக்கள் முகம் மலரும்படி வயலைச் சென்றடையும் திருமுதுகுன்றாகும்.

1411    அறங்கிளரும் நால்வேத மாலின்கீழ்                                      1.131.7
                இருந்தருளி யமரர்வேண்ட
        நிறங்கிளர்செந் தாமரையோன் சிரமைந்தின்
                ஒன்றறுத்த நிமலர்கோயில்
        திறங்கொள்மணித் தரளங்கள் வரத்திரண்டங்
                கெழிற்குறவர் சிறுமிமார்கள்
        முறங்களினாற் கொழித்துமணி செலவிலக்கி
                முத்துலைப்பெய் முதுகுன்றமே

பொழிப்புரை: அறநெறி விளங்கித் தோன்றும் நான்கு வேதங்களை ஆலின்கீழ் இருந்து சனகாதியர்க்கருளி, தேவர்கள் வேண்டுகோளுக்கிணங்கி, செந்நிறம் விளங்கும் தாமரையில் எழுந்தருளிய பிரமனின் ஐந்து தலைகளிலொன்றைக் கொய்த நிமலனாகிய சிவபிரானது கோயில், முற்றிய மாணிக்கங்கள் முத்துக்கள் ஆகியன ஆற்றில் வருதலைக் கண்டு அழகிய குறவர் குடிப்பெண்கள் திரண்டு சென்று அவற்றை முறங்களால் வாரி மணிகளை விலக்கிப் புடைத்து, முத்துக்களை அரிசியாக உலையில் பெய்து சிற்றிலிழைத்து விளையாடி மகிழும் திருமுதுகுன்றமாகும். (மணி – மாணிக்கங்கள்; தரளம் – முத்து)

1412    கதிரொளிய நெடுமுடிபத் துடையகடல்                                  1.131.8
                இலங்கையர்கோன் கண்ணும்வாயும்
        பிதிரொளிய கனல்பிறங்கப் பெருங்கயிலை
                மலையைநிலை பெயர்த்தஞான்று
        மதிலளகைக் கிறைமுரல மலரடியொன்
                றூன்றிமறை பாடவாங்கே
        முதிரொளிய சுடர்நெடுவாள் முன்னீந்தான்
                வாய்ந்தபதி முதுகுன்றமே

பொழிப்புரை: கதிரவன் போன்ற ஒளியையுடைய நீண்ட மகுடங்களைச் சூடிய பத்துத் தலைகளையுடைய இராவணன் கண்களும், வாயும், ஒளிபரவும் தீ வெளிப்படச் சினங்கொண்டு பெரிய கயிலாய மலையை நிலைபெயர்த்த காலத்து, மதில்கள் சூழ்ந்த அளகாபுரிக்கு இறைவனாகிய குபேரன் மகிழுமாறு, மலர்போன்ற தன் திருவடியொன்றை ஊன்றி, அவ்விராவணனைத் தண்டித்துப் பின் அவன் மறைபாடித் துதித்த அளவில் அவனுக்கு மிக்க ஒளியுள்ள நீண்ட வாளை முற்படத் தந்த சிவபிரான் எழுந்தருளிய பதி திருமுதுகுன்றமாகும்.

1413    பூவார்பொற் றவிசின்மிசை யிருந்தவனும்                                1.131.9
                பூந்துழாய் புனைந்தமாலும்
        ஓவாது கழுகேன மாயுயர்ந்தாழ்ந்
                துறநாடி யுண்மைகாணாத்
        தேவாருந் திருவுருவன் சேருமலை
                செழுநிலத்தை மூடவந்த
        மூவாத முழங்கொலிநீர் கீழ்த்தாழ
                மேலுயர்ந்த முதுகுன்றமே

பொழிப்புரை: தாமரை மலராகிய அழகிய தவிசின்மிசை விளங்கும் பிரமனும், அழகிய துளசி மாலை அணிந்த திருமாலும், அன்னமாகவும், பன்றியாகவும் உருமாறி வானில் பறந்தும், நிலத்தை அகழ்ந்தும் இடைவிடாது தேடியும் உண்மை காண இயலாத தெய்வ ஒளி பொருந்திய திருவுருவை உடையவனாகிய சிவபிரான் எழுந்தருளிய மலை, ஊழிக்காலத்து உலகத்தை மூடுமாறு முழங்கி வந்த கடல்நீர் கீழ்ப்படத் தான் மேலுயர்ந்து தோன்றும் திருமுதுகுன்றமாகும்.

1414    மேனியில்சீ வரத்தாரும் விரிதருதட்                                      1.131.10
                டுடையாரும் விரவலாகா
        ஊனிகளா யுள்ளார்சொற் கொள்ளாதும்
                உள்ளுணர்ந்தங் குய்மின்தொண்டீர்
        ஞானிகளா யுள்ளார்கள் நான்மறையை
                முழுதுணர்ந்தைம் புலன்கள்செற்று
        மோனிகளாய் முனிச்செல்வர் தனித்திருந்து
                தவம்புரியும் முதுகுன்றமே

பொழிப்புரை: உடம்பில் துவராடை புனைந்த புத்த மதத்தினரும், விரிந்த ஓலைத் தடுக்கை உடையாகப் பூண்ட சமணர்களும் நட்புச் செய்து கோடற்கு ஏலாதவராய்த் தங்கள் உடலை வளர்த்தலையே குறிக்கோளாக உடைய ஊனிகளாவர், அவர்கள் சொற்களைக் கேளாது ஞானிகளாக உள்ளவர்களும், நான்மறைகளை யுணர்ந்தவர்களும், ஐம்புலன்களை வென்ற மௌனிகளும், முனிவர்களாகிய செல்வர்களும், தனித்திருந்து தவம் புரியும் திருமுதுகுன்றை உள்ளத்தால் உணர்ந்து, தொண்டர்களே! உய்வீர்களாக!

1415    முழங்கொலிநீர் முத்தாறு வலஞ்செய்யும்                                1.131.11
                முதுகுன்றத் திறையைமூவாப்
        பழங்கிழமைப் பன்னிருபேர் படைத்துடைய
                கழுமலமே பதியாக்கொண்டு
        தழங்கெரிமூன் றோம்புதொழில் தமிழ்ஞான
                சம்பந்தன் சமைத்தபாடல்
        வழங்குமிசை கூடும்வகை பாடுமவர்
                நீடுலகம் ஆள்வர்தாமே

பொழிப்புரை: ஆரவாரத்தோடு நிறைந்துவரும் மணிமுத்தாறு வலஞ்செய்து இறைஞ்சும் திருமுதுகுன்றத்து இறைவனை, முதுமையுறாததாய்ப் பழமையாகவே பன்னிரு பெயர்களைக் கொண்டுள்ள கழுமலப் பதியில் முத்தீ வேட்கும் தொழிலையுடைய தமிழ் ஞானசம்பந்தன் இயற்றிய இப்பதிகப் பாடல்களைப் பொருந்துமிசையோடு இயன்றளவில் பாடி வழிபடுபவர் உலகத்தை நெடுங்காலம் ஆள்வர்.
திருச்சிற்றம்பலம்

1.132 திருவீழிமிழலை
பண் – மேகராகக் குறிஞ்சி

1416    ஏரிசையும் வடவாலின் கீழிருந்தங்                                        1.132.1
                கீரிருவர்க் கிரங்கிநின்று
        நேரியநான் மறைப்பொருளை யுரைத்தொளிசேர்
                நெறியளித்தோன் நின்றகோயில்
        பாரிசையும் பண்டிதர்கள் பன்னாளும்
                பயின்றபோது மோசைகேட்டு
        வேரிமலி பொழிற்கிள்ளை வேதங்கள்
                பொருள்சொல்லும் மிழலையாமே

பொழிப்புரை: அழகிய வடவால மரத்தின் கீழ் வீற்றிருந்து, சனகாதி முனிவர்களுக்குக் கருணையோடு நேரிய நால்வேதங்களின் உண்மைப் பொருளையுரைத்து, அவர்கட்குச் சிவஞான நெறி காட்டியருளிய சிவபிரானது கோயில், நிலவுலகில் வாழும் வேதப்புலவர்கள் பல நாட்களும் தம்மிடம் பயிலும் மாணவர்களுக்கு வேதம் பயிற்றுவிப்பதைக் கேட்டு, தேன் நிறைந்த பொழில்களில் வாழும் கிளிகள் நாள்தோறும் வேதங்களுக்குப் பொருள் சொல்லும் சிறப்பினதாய திருவீழிமிழலையாகும்.

1417    பொறியரவ மதுசுற்றிப் பொருப்பேமத்                                     1.132.2
                தாகப்புத் தேளிர்கூடி
        மறிகடலைக் கடைந்திட்ட விடமுண்ட
                கண்டத்தோன் மன்னுங்கோயில்
        செறியிதழ்த்தா மரைத்தவிசிற் றிகழ்ந்தோங்கு
                மிலைக்குடைக்கீழ்ச் செய்யார்செந்நெல்
        வெறிகதிர்ச்சா மரையிரட்ட இளவன்னம்
                வீற்றிருக்கும் மிழலையாமே

பொழிப்புரை: தேவர்கள் அனைவரும் கூடி மந்தரமலையை மத்தாக நாட்டி உடலில் புள்ளிகளையுடைய வாசுகியென்னும் பாம்பைக் கயிறாகச் சுற்றிச் சுருண்டு விழும் அலைகளை உடைய கடலைக் கடைந்த காலத்து எழுந்த நஞ்சினையுண்ட கண்டத்தையுடையவனாகிய சிவபிரானுறையுங்கோயில், செறிந்த இதழ்களையுடைய தாமரை மலராகிய இருக்கையில் விளங்கும், தாமரையிலையாகிய குடையின் கீழுள்ள இளவன்னம், வயலில் விளையும் செந்நெற்கதிர்களாகிய சாமரம் வீச வீற்றிருக்கும் திருவீழிமிழலையாகும்.

1418    எழுந்துலகை நலிந்துழலும் அவுணர்கள்தம்                             1.132.3
                புரமூன்றும் எழிற்கண்நாடி
        உழந்துருளும் அளவையினொள் ளெரிகொளவெஞ்
                சிலைவளைத்தோன் உறையுங்கோயில்
        கொழுந்தரளம் நகைகாட்டக் கோகநதம்
                முகங்காட்டக் குதித்துநீர்மேல்
        விழுந்தகயல் விழிகாட்ட விற்பவளம்
                வாய்காட்டும் மிழலையாமே

பொழிப்புரை: வானத்திற் பறந்து திரிந்து உலக மக்களை நலிவு செய்து உழன்ற அசுரர்களின் முப்புரங்களையும் அழகிய கண்ணாடியில், உளுந்து உருளக்கூடிய கால அளவிற்குள் ஒளி பொருந்திய தீப்பற்றி எரியுமாறு கொடிய வில்லை வளைத்தவனுமாகிய சிவபிரான் உறையும் கோயில், செழுமையான முத்துக்கள் மகளிரின் பற்களையும், தாமரைகள் முகங்களையும் துள்ளிக் குதித்து நீர்மேல் விழும் கயல்கள் கண்களையும், ஒளி பொருந்திய பவளங்கள் வாய்களையும் காட்டும் திருவீழிமிழலையாகும்.

1419    உரைசேரும் எண்பத்து நான்குநூ                                         1.132.4
                றாயிரமாம் யோனிபேதம்
        நிரைசேரப் படைத்தவற்றின் உயிர்க்குயிராய்
                அங்கங்கே நின்றான்கோயில்
        வரைசேரும் முகில்முழவ மயில்கள்பல
                நடமாட வண்டுபாட
        விரைசேர்பொன் னிதழிதர மென்காந்தள்
                கையேற்கும் மிழலையாமே

பொழிப்புரை: நூல்களில் உரைக்கப் பெறும் எண்பத்துநான்கு லட்சம் பிறப்பு வேறுபாடுகளையும் முறையாகப் படைத்து, அவ்வவற்றின் உயிர்கட்கு உயிராய் அங்கங்கே விளங்கி நிற்போனாகிய சிவபிரானுறையுங்கோயில், மலைகளில் தங்கியுள்ள மேகங்கள் எழுந்து வந்து முழவுபோல ஒலிக்க, ஆண்மயில்கள் பல நடனமாட, வண்டுகள் பாட, பரிசிலாகக் கொன்றை மரங்கள் மணம் பொருந்திய மலரிதழ்களாகிய பொன்னைத் தர, மெல்லிய காந்தள் மலர்கள் கை போல விரிந்ததனையேற்கும் திருவீழிமிழலையாகும்.

1420    காணுமா றரியபெரு மானாகிக்                                            1.132.5
                காலமாய்க் குணங்கள்மூன்றாய்ப்
        பேணுமூன் றுருவாகிப் பேருலகம்
                படைத்தளிக்கும் பெருமான்கோயில்
        தாணுவாய் நின்றபர தத்துவனை
                உத்தமனை இறைஞ்சீரென்று
        வேணுவார் கொடிவிண்ணோர் தமைவிளிப்ப
                போலோங்கு மிழலையாமே

பொழிப்புரை: காண்டற்கரிய கடவுளாய், மூன்று காலங்களாய், மூன்று குணங்களாய் எல்லோராலும் போற்றப் பெறும் அரி, அயன், அரன் ஆகிய முத்தொழில்களைப் புரியும் சிவபிரானுறையுங்கோயில், மூங்கில்களிற் கட்டிய நெடிய கொடிகள் நிலைப் பேறுடையவனாய் நிற்கும் மேலான சிவபிரானாகிய உத்தமனை, வந்து வழிபடுவீர்களாக என்று தேவர்களை அழைப்பன போல அசைந்தோங்கி விளங்கும் திருவீழிமிழலையாகும். (மூன்றுருவுக்கேற்ப அழித்தல் வருவிக்கப் பட்டது).

1421    அகனமர்ந்த அன்பினராய் அறுபகைசெற்                               1.132.6
                றைம்புலனும் அடக்கிஞானப்
        புகலுடையோர் தம்முள்ளப் புண்டரிகத்
                துள்ளிருக்கும் புராணர்கோயில்
        தகவுடைநீர் மணித்தலத்துச் சங்குளவர்க்
                கந்திகழச் சலசத்தீயுள்
        மிகவுடைய புன்குமலர்ப் பொரியட்ட
                மணஞ்செய்யும் மிழலையாமே

பொழிப்புரை: உள்ளத்தில் பொருந்திய அன்புடையவராய், காமம் முதலிய அறுபகைகளையும் கடிந்து, சுவையொளி முதலிய ஐம்புலன்களையடக்கிச் சிவஞானத்தில் திளைத்திருப்பவர்களாகிய துறவிகளின் இதயத்தாமரை யிலெழுந்தருளி விளங்கும் பழையோனாகிய சிவபிரானுறை யுங்கோயில், மணிகளும் சங்கினங்களும் விளங்கும் தூயதான நீர்நிலைகளில் முளைத்த தாமரை மலராகிய தீயில் மிகுதியாக வளர்ந்த புங்க மரங்கள் பொரி போல மலர்களைத் தூவி, திருமண நிகழ்ச்சியை நினைவுறுத்திக் கொண்டிருப்பதாகிய திருவீழிமிழலையாகும்.

1422    ஆறாடு சடைமுடியன் அனலாடு                                         1.132.7
                மலர்க்கையன் இமயப்பாவை
        கூறாடு திருவுருவன் கூத்தாடுங்
                குணமுடையோன் குளிருங்கோயில்
        சேறாடு செங்கழுநீர்த் தாதாடி
                மதுவுண்டு சிவந்தவண்டு
        வேறாய உருவாகிச் செவ்வழிநற்
                பண்பாடும் மிழலையாமே

பொழிப்புரை: கங்கையணிந்த சடைமுடியையுடையவனும், மலர் போன்ற கரத்தில் அனலை ஏந்தியவனும், இமவான் மகளாகிய பார்வதிதேவி, தன்னொரு கூறாக விளங்கத் திகழும் திருமேனியையுடையவனும், கூத்தாடும் குணமுடையவனுமாகிய சிவபிரான் மனங்குளிர்ந்து எழுந்தருளியிருக்கும் கோயில், சேற்றில் முளைத்த செங்கழுநீர் மலர்களின் மகரந்தங்களில் படிந்து, தேனையுண்டு, தன்னியல்பான நிறம் மாறிச் சிவந்த நிறமுடையதாய்த் தோன்றும் வண்டு செவ்வழிப் பண்ணைப் பாடிக் களிக்கும் திருவீழிமிழலையாகும்.

1423    கருப்பமிகும் உடலடர்த்துக் காலூன்றிக்                                  1.132.8
                கைமறித்துக் கயிலையென்னும்
        பொருப்பெடுக்க லுறுமரக்கன் பொன்முடித்தோள்
                நெரித்தவிரற் புனிதர்கோயில்
        தருப்பமிகு சலந்தரன்றன் உடல்தடிந்த
                சக்கரத்தை வேண்டியீண்டு
        விருப்பொடுமால் வழிபாடு செய்யவிழி
                விமானஞ்சேர் மிழலையாமே

பொழிப்புரை: கர்வம் மிகுந்த உடலை வருத்தி நெருங்கிச் சென்று காலையூன்றிக் கைகளை வளைத்துக் கயிலையென்னும் மலையைப் பெயர்த்தெடுக்க முற்பட்ட அரக்கனாகிய இராவணனின் பொன்முடி தரித்த தலைகளையும் தோள்களையும் நெரித்து, அடர்த்த கால் விரலையுடைய தூயவராகிய சிவபிரானார் உறையும் கோயில், செருக்கு மிக்க சலந்தரன் என்னும் அவுணனது உடலைத் தடிந்த சக்கராயுதத்தைப் பெற விரும்பிப் பெருவிருப்போடு இவ்வுலகில் திருமால் வழிபாடு செய்ததும், வானிலிருந்து இழிந்த விமானத்தை யுடையதுமாகிய திருவீழி மிழலையாகும்.

1424    செந்தளிர்மா மலரோனுந் திருமாலும்                                     1.132.9
                ஏனமொடு அன்னமாகி
        அந்தமடி காணாதே அவரேத்த
                வெளிப்பட்டோன் அமருங்கோயில்
        புந்தியினான் மறைவழியே புற்பரப்பி
                நெய்சமிதை கையிற்கொண்டு
        வெந்தழலின் வேட்டுலகின் மிகவளிப்போர்
                சேருமூர் மிழலையாமே

பொழிப்புரை: சிவந்த இதழ்களையுடைய பெரிய தாமரை மலரின்மேலுறயும் பிரமனும், திருமாலும் அன்னமாகியும், பன்றியாகியும் முடியடிகளைக் காணாது தம் செருக்கழிந்து வழிபட அவர்கட்குக் காட்சியளித்தோனாகிய சிவபிரான் அமருங்கோயில், தாங்கள் பெற்ற அறிவால் வேத விதிப்படி தருப்பைப் புற்களைப் பரப்பி, நெய், சமித்து ஆகியவற்றைக் கையிற்கொண்டு அழல் வளர்த்து வேள்வி செய்து உலகைக் காப்பவர்களாகிய அந்தணர்கள் சேரும் ஊராகிய திருவீழிமிழலையாகும்.

1425    எண்ணிறந்த அமணர்களும் இழிதொழில்சேர்                          1.132.10
                சாக்கியரும் என்றுந்தன்னை
        நண்ணரிய வகைமயக்கித் தன்னடியார்க்
                கருள்புரியும் நாதன்கோயில்
        பண்ணமரும் மென்மொழியார் பாலகரைப்
                பாராட்டும் ஓசைகேட்டு
        விண்ணவர்கள் வியப்பெய்தி விமானத்தோ
                டும்மிழியும் மிழலையாமே

பொழிப்புரை: எண்ணற்ற சமணர்களும், இழிதொழில் புரியும் சாக்கியர்களும், எக்காலத்தும் தன்னை நெருங்க இயலாதவாறு அவர்கள் அறிவை மயக்கித் தன்னடியவர்களுக்கருள் புரியும் சிவபிரான் எழுந்தருளிய கோயில், பண்ணிசை போலும் மென்மொழி பேசும் மகளிர் தாங்கள் பெற்ற புதல்வர்களைப் பாராட்டும் தாலாட்டு ஓசை கேட்டு வியந்து, தேவர்கள் விமானங்களோடு வந்திறங்கும் திருவீழிமிழலையாகும்.

1426    மின்னியலும் மணிமாடம் மிடைவீழி                                      1.132.11
                மிழலையான் விரையார்பாதஞ்
        சென்னிமிசைக் கொண்டொழுகுஞ் சிரபுரக்கோன்
                செழுமறைகள் பயிலும்நாவன்
        பன்னியசீர் மிகுஞான சம்பந்தன்
                பரிந்துரைத்த பத்துமேத்தி
        இன்னிசையாற் பாடவல்லார் இருநிலத்தில்
                ஈசனெனும் இயல்பினோரே

பொழிப்புரை: மின்னல் போலும் ஒளியுடைய மணிகள் இழைத்த மாடவீடுகள் செறிந்த திருவீழிமிழலை இறைவனின் மணம் கமழ்கின்ற திருவடிகளைச் சென்னிமிசைக் கொண்டொழுகும் இயல்புடைய சிரபுரநகரின் தலைவனும், செழுமறை பயின்ற நாவினனும் பலர் போற்றும் சிறப்பு மிக்கவனுமாகிய ஞானசம்பந்தன் அன்பு கொண்டு பாடி இப்பதிகப் பாடல்கள் பத்தையும் போற்றி இன்னிசையோடு பாடவல்லவர்கள் பெரிதான இவ்வுலகில் ஈசனென்று போற்றும் இயல்புடையோராவர்.

திருச்சிற்றம்பலம்

1.133 திருவேகம்பம்

பண் – மேகராக்க் குறிஞ்சி

1427    வெந்தவெண் பொடிப்பூசு மார்பின்விரி நூலொருபால் பொருந்தக்    1.133.1
        கந்தமல்கு குழலியோடுங் கடிபொழிற் கச்சி தன்னுள்
        அந்தமில் குணத்தா ரவர்போற்ற அணங்கினொ டாடல்புரி
        எந்தை மேவிய ஏகம்பந்தொழு தேத்த இடர்கெடுமே

பொழிப்புரை: அனலிடை நன்றாக வெந்த வெண்மையான திருநீற்றைப் பூசியுள்ள மார்பின்கண் விரிந்த பூணூல் ஒருபால் விளங்கித் தோன்ற, மணங்கமழும் கூந்தலினையுடைய உமையம்மையோடும், விளங்கும் பொழில்களால் சூழப்பட்ட கச்சியென்னும் தலத்துள் எல்லையற்ற குணங்களையுடைய அடியவர்கள் போற்ற நடனம் செய்யும் எந்தையாகிய சிவபெருமான் எழுந்தருளிய ஏகம்பமென்னும் திருக்கோயிலைத் தொழுது போற்ற, இடர் கெடும்.

1428    வரந்திகழு மவுணர் மாநகர்மூன் றுடன்மாய்ந் தவியச்                  1.133.2
        சரந்துரந் தெரிசெய்த தாழ்சடைச் சங்கரன் மேயவிடம்
        குருந்தும் மல்லிகை கோங்குமா தவிநல்ல குராமரவந்
        திருந்துபைம் பொழிற்கச்சி யேகம்பஞ் சேர விடர்கெடுமே

பொழிப்புரை: வரம்பெற்ற அவுணர்களின் பெருநகராக விளங்கிய முப்புரங்களும் ஒருசேர மாய்ந்து கெடுமாறு கணை எய்து எரித்தழித்த, தாழ்ந்து தொங்கும் சடைகளையுடைய சங்கரன் எழுந்தருளிய இடமாகிய குருந்தம், மல்லிகை, கோங்கு, மாதவி, நல்லகுரா, கடம்பமரம் ஆகியனவற்றால் சிறந்து விளங்கும் பசுமையான பொழில் சூழ்ந்த கச்சிமாநகரிலுள்ள திருவேகம்பத்தையடைந்து தொழ, நம் இடர் கெடும்.

1429    வண்ணவெண் பொடிப்பூசு மார்பின் வரியர வம்புனைந்து              1.133.3
        பெண்ணமர்ந் தெரியாடற் பேணிய பிஞ்ஞகன் மேயவிடம்
        விண்ணமர் நெடுமாட மோங்கி விளங்கிய கச்சிதன்னுள்
        திண்ணமாம் பொழில்சூழ்ந்த ஏகம்பஞ் சேர விடர்கெடுமே

பொழிப்புரை: வெண்மைநிறம் அமைந்த திருநீறு பூசிய மார்பின்கண் உடலில் வரிகளையுடைய பாம்பையணிந்து, உமையம்மையை விரும்பியேற்று, சுடுகாட்டில் எரியாடல் புரியும் தலைக்கோலம் உடையவனாகிய சிவபிரான் மேவிய இடமாகிய விண்ணளாவிய நீண்ட மாடவீடுகள் ஓங்கி விளங்குவதும், என்றும் நிலைபெற்ற பொழில்களால் சூழப்பட்ட்துமாகிய கச்சிமாநகரிலுள்ளதுமாகிய திருவேகம்பத்தைச் சென்று வணங்க நம் இடர் கெடும்.

1430    தோலும்நூ லுந்தைத்த வரைமார்பிற் சுடலைவெண் ணீறணிந்து     1.133.4
        காலன்மாள் வுறக்காலாற் காய்ந்த கடவுள் கருதுமிடம்
        மாலைவெண் மதிதோயு மாமதிற் கச்சி மாநகருள்
        ஏலம்நாறிய சோலைசூழ் ஏகம்பம் ஏத்த விடர்கெடுமே

பொழிப்புரை: மான்தோலும் பூணூலும் பொருந்திய மலை போன்ற மார்பின்கண் சுடலையில் எடுத்த வெண்மையான திருநீற்றையணிந்து மார்க்கண்டேயர்க்காகக் காலன் மாயும்படி காலால் அவனை உதைத்தருளிய கடவுளாகிய சிவபிரான் விரும்புமிடமாகிய, மாலை நேரத்தில் தோன்றும் வெண்மையான மதி தோயுமாறு உயர்ந்த பெரிய மதில்களையுடைய பெரிய காஞ்சிபுர நகரில் மணம் வீசும் சோலைகளால் சூழப்பட்ட ஏகம்பம் என்னும் திருக்கோயிலை ஏத்த, நம் இடர் கெடும்.

1431    தோடணிம் மலர்க்கொன்றை சேர்சடைத் தூமதி யம்புனைந்து                1.133.5
        பாடல்நான் மறையாகப் பல்கணப் பேய்க ளவைசூழ
        வாடல்வெண் டலையோ டனலேந்தி மகிழ்ந்துடன் ஆடல்புரி
        சேடர்சேர் கலிக்கச்சி ஏகம்பஞ் சேர விடர்கெடுமே.

பொழிப்புரை: அழகிய இதழ்களோடு கூடிய கொன்றை மலர்மாலை சூடிய சடையின்மேல் தூய பிறைமதியையணிந்து நான்மறைகளைப் பாடல்களாகக் கொண்டு பேய்க்கணங்கள் பல சூழப் புலால் வற்றிய வெண்தலையோட்டையும், அனலையும் கையிலேந்தி மகிழ்வோடு உமையம்மையுடன் ஆடல் புரிகின்ற பெரியோனாகிய சிவபிரான் எழுந்தருளிய ஆரவாரமுடைய கச்சியில் விளங்கும் திருஏகம்பத்தை நினைக்க, நம் இடர் கெடும்.

1432    சாகம்பொன் வரையாகத் தானவர் மும்மதில் சாயவெய்               1.133.6
        தாகம்பெண் ணொருபாக மாக அரவொடு நூலணிந்து
        மாகந்தோய் மணிமாட மாமதிற் கச்சி மாநகருள்
        ஏகம்பத் துறையீசன் சேவடி யேத்த விடர்கெடுமே

பொழிப்புரை: மேரு மலையை வில்லாகக் கொண்டு அசுரர்களின் முப்புரங்களை அழியுமாறு கணைதொடுத்துத் தன் திருமேனியில் உமையம்மையை ஒரு பாகமாகக் கொண்டு மார்பில் பாம்பையும், முப்புரி நூலையும் அணிந்து விண்ணளாவிய அழகிய மாடங்களையும், பெரிய மதிலையும் உடைய கச்சிமாநகரில் விளங்கும் திருஏகம்பத்தில் உறையும் ஈசன் திருவடிகளை ஏத்த, நம் இடர் கெடும்.

1433    (*) இப்பதிகத்தில் 7-ம் செய்யுள் சிதைந்து போயிற்று.                    1.133.7

1434    வாணிலா மதிபுல்கு செஞ்சடை வாளர வம்மணிந்து                    1.133.8
        நாணிடத் தினில்வாழ்க்கை பேணி நகுதலையிற் பலிதேர்ந்
        தேணிலா அரக்கன்றன் நீள்முடி பத்தும் இறுத்தவனூர்
        சேணுலாம் பொழிற்கச்சி ஏகம்பஞ் சேர விடர்கெடுமே

பொழிப்புரை: ஒளி விளங்கும் பிறைமதி பொருந்திய செஞ்சடையில் ஒளி பொருந்திய பாம்பினையணிந்து இடப்பாகத்தே நாணோடு கூடியவளாகிய இல்வாழ்க்கைக்குரிய உமையம்மையை விரும்பியேற்றுச் சிரிக்கும் தலையோட்டில் பலியேற்று, மன உறுதி படைத்தவனாகிய இராவணனின் நீண்ட முடிகள் பத்தையும் நெரித்தவனாகிய சிவபிரானது வானளாவிய பொழில்களையுடைய கச்சிமா நகரிலுள்ள திரு ஏகம்பத்தையடைந்து தொழ நம் இடர் கெடும்.

1435    பிரமனுந் திருமாலுங் கைதொழப் பேரழ லாயபெம்மான்               1.133.9
        அரவஞ் சேர்சடை அந்தணன் அணங்கினொ டமருமிடம்
        கரவில்வண் கையினார்கள் வாழ்கலிக் கச்சி மாநகருள்
        மரவஞ்சூழ் பொழிலேகம் பந்தொழ வில்வினை மாய்ந்தறுமே

பொழிப்புரை:  பிரமனும், திருமாலும் தம் கைகளால் தொழுது வணங்கப் பெரிய அனலுருவாகி நின்ற பெருமானும், பாம்பணிந்த சடையையுடைய அந்தணனும் ஆகிய சிவபிரான் தன் தேவியோடு அமருமிடமாகிய வஞ்சகமில்லாத வள்ளன்மை பொருந்திய கையினை உடையவர்கள் வாழ்கின்ற ஆரவாரமுடைய கச்சி மாநகரில் குங்கும மரங்கள் பொருந்திய சோலைகளால் சூழப்பட்டு விளங்கும் திருஏகம்பத்தைத் தொழ நம் வல்வினைகள் மாய்ந்து கெடும்.

1436    குண்டுபட் டமணா யவரொடுங் கூறைதம் மெய்ப்போர்க்கும்          1.133.10
        மிண்டர் கட்டிய கட்டுரை யவைகொண்டு விரும்பேன்மின்
        விண்டவர் புரமூன்றும் வெங்கணை ஒன்றி னாலவியக்
        கண்டவன் கலிக்கச்சி யேகம்பங் காண விடர்கெடுமே

பொழிப்புரை: பருமையான உடலோடு ஆடையின்றித் திரியும் சமணர்களோடு ஆடையைத் தம்முடலில் போர்த்து வலியவராய்த் திரியும் புத்தர்களும் புனைந்து கூறுமுரைகளைப் பொருளுரையாகக் கருதி விரும்பாதீர்கள். கணையொன்றை எய்து, கொடிய பகைவர்களாகிய அவுணர்களின் மூன்று புரங்களையும் எரித்தழித்தவனாகிய சிவபிரான் எழுந்தருளிய கச்சியின்கண்ணுள்ள திருவேகம்பத்தைச் சென்று காண, நம் இடர் கெடும்.

1437    ஏரினார் பொழில்சூழ்ந்த கச்சி யேகம்பம் மேயவனை                   1.133.11
        காரினார் மணிமாட மோங்கு கழுமல நன்னகருள்
        பாரினார் தமிழ்ஞான சம்பந்தன் பரவிய பத்தும் வல்லார்
        சீரினார் புகழோங்கி விண்ணவ ரோடுஞ் சேர்பவரே

பொழிப்புரை: அழகு நிறைந்த பொழில்கள் சூழ்ந்த கச்சியேகம்பத்துள் விளங்கும் இறைவனை மேகங்கள் தவழும் அழகிய மாடங்கள் ஓங்கும் கழுமல நன்னகருள் தோன்றிய தமிழ்வல்ல ஞானசம்பந்தன் பரவிப்போற்றிய பத்துப் பாடல்களையும் ஓத வல்லவர் இவ்வுலகின்கண் சிறந்த புகழால் ஓங்கி விளங்கிப் பின் விண்ணவர்களோடும் சேர்ந்து வாழும் நிலையைப் பெறுவர்.

திருச்சிற்றம்பலம்

1.134 திருப்பறியலூர் – திருவீரட்டம்

பண் – மேகராகக் குறிஞ்சி

1438    கருத்தன் கடவுள் கனலேந் தியாடும்                                      1.134.1
                நிருத்தன் சடைமேல் நிரம்பா மதியன்
        திருத்த முடையார் திருப்பறி யலூரில்
                விருத்தன் எனத்தகும் வீரட்டத் தானே

பொழிப்புரை: திருந்திய மனமுடையவர்கள் வாழும் திருப்பறியலூரில் தொன்மையானவனாய் விளங்கும் வீரட்டானத்திறைவன் அனைத்துலகங்களுக்கும் தலைவனும், கடவுளுமாக இருப்பவன்; சடைமுடி மீது இளம்பிறையணிந்தவன்; கையில் கனலேந்தி நடனம் புரிபவன்.

1439    மருந்தன் அமுதன் மயானத்துள் மைந்தன்                               1.134.2
                பெருந்தண் புனற்சென்னி வைத்த பெருமான்
        திருந்து மறையோர் திருப்பறி யலூரில்
                விரிந்த மலர்ச்சோலை வீரட்டத் தானே

பொழிப்புரை: ஒழுக்கத்திற் சிறந்த அந்தணர்கள் வாழும் விரிந்த மலர்ச்சோலைகளையுடைய திருப்பறியலூரில் விளங்கும் வீரட்டானத்திறைவன், பிணி தீர்க்கும் மருந்தாவான். உயிர் காக்கும் அமுதமாவான். மயானத்துள் நின்றாடும் வலியோனாவான். மிகப் பெரியதாகப் பரந்து வந்த குளிர்ந்த கங்கையைத் தன் சென்னியில் தாங்கி வைத்துள்ள பெருமானாவான்.

1440    குளிர்ந்தார் சடையன் கொடுஞ்சிலை விற்காமன்                       1.134.3
                விளிந்தான் அடங்க வீந்தெய்தச் செற்றான்
        தெளிந்தார் மறையோர் திருப்பறி யலூரில்
                மிளிர்ந்தார் மலர்ச்சோலை வீரட்டத் தானே

பொழிப்புரை: அறிவில் தெளிந்த மறையோர்கள் வாழும் மலர்ச்சோலைகளால் சூழப்பட்ட திருப்பறியலூரில் விளங்கும் வீரட்டானத்திறைவன் குளிர்ந்த சடைமுடியையுடையவன். கொடிய வில்லை வளைத்து மலர்க்கணையைத் தொடுத்த மன்மதனை எரித்து இறக்குமாறு செய்து, இரதிதேவி வேண்ட அவனைத் தோற்றுவித்தவன்.

1441    பிறப்பாதி யில்லான் பிறப்பார் பிறப்புச்                                    1.134.4
                செறப்பாதி யந்தஞ் செலச்செய்யுந் தேசன்
        சிறப்பா டுடையார் திருப்பறி யலூரில்
                விறற்பா ரிடஞ்சூழ வீரட்டத் தானே

பொழிப்புரை: சிறப்புடையவர்கள் வாழ்கின்ற திருப்பறியலூரில் வலிமை பொருந்திய பூதகணங்கள் தன்னைச் சூழ விளங்கும் வீரட்டானத்திறைவன், பிறப்பும் இறப்பும் இல்லாதவன். இவ்வுலகில் பிறவி எடுக்கும் உயிர்கள் அடையும் பிறப்புக்கும், சிறப்புக்கும் முதலும் முடிவும் காணச் செய்யும் ஒளி வடிவினன்.

1442    கரிந்தார் இடுகாட்டி லாடுங் கபாலி                                       1.134.5
                புரிந்தார் படுதம் புறங்காட் டிலாடும்
        தெரிந்தார் மறையோர் திருப்பறி யலூரில்
                விரிந்தார் மலர்ச்சோலை வீரட்டத் தானே

பொழிப்புரை: நான்கு வேதங்களையும் ஆராய்ந்தறிந்த மறையவர்கள் வாழும் விரிந்த மலர்ச் சோலைகளையுடைய திருப்பறியலூரில் விளங்கும் வீரட்டானத்திறைவர், இறந்தவர்களைக் கரிந்தவர்களாக எரிக்கும் சுடுகாட்டிலாடும் கபாலி.

1443    அரவுற்ற நாணா அனலம்ப தாகச்                                        1.134.6
                செருவுற் றவர்புரந் தீயெழச் செற்றான்
        தெருவிற் கொடிசூழ் திருப்பறி யலூரில்
                வெருவுற் றவர்தொழும் வீரட்டத் தானே

பொழிப்புரை: தெருக்களில் நடப்பட்ட கொடிகளால் சூழப்பெற்ற திருப்பறியலூரில், பிறவிப் பிணிக்கு அஞ்சுபவர்களால் தொழப்படும் வீரட்டானத்திறைவன், வாசுகி என்னும் பாம்பை மேருவில்லில் நாணாக இணைத்து, அனலை அம்பாகக் கொண்டு, தன்னோடு போரிட்டவரின் முப்புரங்களைத் தீயெழுமாறு செய்து அழித்தவன்.

1444    நரையார் விடையான் நலங்கொள் பெருமான்                          1.134.7
                அரையா ரரவம் அழகா வசைத்தான்
        திரையார் புனல்சூழ் திருப்பறி யலூரில்
                விரையார் மலர்ச்சோலை வீரட்டத் தானே

பொழிப்புரை: அலைகளையுடைய நீர்க்கால்களால் சூழப்பட்டதும், மணம் பொருந்திய மலர்ச்சோலைகளையுடையதுமான திருப்பறியலூர் வீரட்டத்தில் விளங்கும் இறைவன், வெண்மை நிறம் பொருந்திய விடையேற்றையுடையவன். நன்மைகளைக் கொண்டுள்ள தலைவன்; இடையில் பாம்பினைக் கச்சாக அழகுறக் கட்டியவன்.

1445    வளைக்கும் மெயிற்றின் னரக்கன் வரைக்கீழ்                            1.134.8
                இளைக்கும் படிதா னிருந்தேழை யன்னம்
        திளைக்கும் படுகர்த் திருப்பறி யலூரில்
                விளைக்கும் வயல்சூழ்ந்த வீரட்டத் தானே

பொழிப்புரை: பெண் அன்னங்கள் ஆண் அன்னங்களோடு கூடித்திளைக்கும் ஆழமான மடுக்களையுடையதும், மிகுதியான நெல்விளைவைத் தரும் வயல்களால் சூழப்பட்டதுமான திருப்பறியலூர் வீரட்டானத்திறைவன், வளைந்த பற்களையுடைய இராவணனைக் கயிலை மலையின்கண் அகப்படுத்தி, அவனை வலிமை குன்றியவனாகும்படி கால்விரலால் அடர்த்து எழுந்தருளியிருப்பவனாவன்.

1447    வளங்கொள் மலர்மேல் அயனோத வண்ணன்                          1.134.9
                துளங்கும் மனத்தார் தொழத்தழ லாய்நின்றான்
        இளம்கொம் பனாளோ டிணைந்தும் பிணைந்தும்
                விளங்குந் திருப்பறியல் வீரட்டத் தானே

பொழிப்புரை: இளைய பூங்கொம்பு போன்றவளாகிய உமையம்மையோடிணைந்தும், இடப்பாகமாக அவ்வம்மையைக் கொண்டும் விளங்குபவனாகிய திருப்பறியல் வீரட்டத்திறைவன், ஒளி விளங்கும் தாமரை மலர்மேலுறையும் பிரமனும் கடல்வண்ணனாகிய திருமாலும் அச்சத்தால் நடுங்கிய மனத்தையுடையவராய்த் தன்னைத் தொழத் தழலுருவாய் நின்றவனாவான்.

1448    சடையன் பிறையன் சமண்சாக் கியரோ                                 1.134.10
                டடையன் பிலாதான் அடியார் பெருமான்
        உடையன் புலியின் உரிதோல் அரைமேல்
                விடையன் திருப்பறியல் வீரட்டத் தானே

பொழிப்புரை: திருப்பறியல் வீரட்டத்திலுறையுமிறைவன், சடையில் பிறையணிந்தவன்; சமணர், புத்தர் ஆகியோர்க்கருள்புரிதற்குரிய அன்பிலாதவன்; புலியின் தோலை இடைமேலாடையாக உடுத்தவன்; விடையேற்றினையுடையவன்.

1449    நறுநீ ருகுங்காழி ஞானசம் பந்தன்                                        1.134.11
                வெறிநீர்த் திருப்பறியல் வீரட்டத் தானைப்
        பொறிநீ டரவன் புனையாடல் வல்லார்க்
                கறுநீ டவலம் அறும்பிறப் புத்தானே

பொழிப்புரை: நல்ல நீர் பாயும் சீகாழிப் பதியில் தோன்றிய ஞானசம்பந்தன், மணங்கமழும் நீர்வளமுடைய திருப்பறியல் வீரட்டானத்துறையும் புள்ளிகளையுடைய நீண்ட பாம்பினையணிந்த இறைவனைப் புனைந்து போற்றிய இப்பதிகப் பாடல்களை வல்லவர்கட்குப் பெரிய துன்பங்களும் பிறப்பும் நீங்கும்.

திருச்சிற்றம்பலம்

1.135 திருப்பராய்த்துறை

பண் – மேகராகக் குறிஞ்சி

1450    நீறுசேர்வதொர் மேனியர்நேரிழை                                         1.135.1
        கூறுசேர்வதொர் கோலமாய்ப்
        பாறுசேர்தலைக் கையர்பராய்த்துறை
        ஆறுசேர்சடை அண்ணலே

பொழிப்புரை: திருப்பராய்த்துறையில், கங்கையையணிந்த சடையினராய் விளங்கும் இறைவர், திருநீறணிந்த திருமேனியையுடையவர். அணிகலன்கள் பல புனைந்த உமையம்மையை ஒரு பாகமாகக் கொண்ட கோலத்தினர். பருந்துகள் தொடரத் தக்கதாய்ப் புலால் நாற்றம் கூடிய பிரமனது தலையோட்டைக் கையில் கொண்டவர். (பாறு – பருந்து)

1451    கந்தமாமலர்க் கொன்றைகமழ்சடை                                       1.135.2
        வந்தபூம்புனல் வைத்தவர்
        பைந்தண்மாதவி சூழ்ந்தபராய்த்துறை
        அந்தமில்ல அடிகளே

பொழிப்புரை: பசுமையான குளிர்ந்த குருக்கத்திக் கொடிகள் சூழ்ந்த திருப்பராய்த்துறையில் விளங்கும் அழிவற்றவராகிய இறைவர், மணங்கமழும் சிறந்த மலர்களும், கொன்றையும் மணக்கும் சடைமுடியின்மேல் பெருக்கெடுத்து வந்த கங்கை நதியை வைத்துள்ளவர்.

1452    வேதர்வேதமெல் லாமுறையால்விரித்                                     1.135.3
        தோதநின்ற ஒருவனார்    
        பாதிபெண்ணுரு ஆவர்பராய்த்துறை
        ஆதியாய அடிகளே

பொழிப்புரை: திருப்பராய்த்துறையில் எல்லா உலகங்களுக்கும் ஆதியாக விளங்குபவராய் எழுந்தருளியுள்ள இறைவர், வேதங்களையருளிச் செய்தவர். எல்லா வேதங்களையும் முறையாக விரித்துப் பொருள் விளக்கமருளிய ஒப்பற்றவர். தம் திருமேனியில் பாதிப் பெண்ணுருவாக விளங்குபவர்.

1453    தோலுந்தம்மரை யாடைசுடர்விடு                                         1.135.4
        நூலுந்தாமணி மார்பினர்
        பாலும்நெய்பயின் றாடுபராய்த்துறை
        ஆலநீழல் அடிகளே

பொழிப்புரை: திருப்பராய்த்துறையில் ஆலநீழலில் எழுந்தருளிப் பால், நெய் முதலியவற்றை விரும்பியாடும் இறைவர், புலித்தோலைத் தம்மிடையிலே ஆடையாகவுடுத்தவர், பூணூலணிந்த ஒளிபொருந்திய மார்பினையுடையவர்.

1454    விரவிநீறுமெய் பூசுவர்மேனிமேல்                                          1.135.5
        இரவில்நின்றெரி யாடுவர்
        பரவினாரவர் வேதம்பராய்த்துறை
        அரவமார்த்த அடிகளே

பொழிப்புரை: திருப்பராய்த்துறையில் பாம்பை இடையில் கட்டியவராய் விளங்கும் பரமர், திருநீற்றைத் தம் மேனிமேல் விரவப் பூசியவர், வேதங்களால் பரவப்பெற்றவர், நள்ளிரவில் சுடுகாட்டுள் நின்று, எரியாடுபவர்.

1455    மறையுமோதுவர் மான்மறிக்கையினர்                                    1.135.6
        கறைகொள்கண்ட முடையவர்
        பறையுஞ்சங்கும் ஒலிசெய்பராய்த்துறை
        அறையநின்ற அடிகளே

பொழிப்புரை: பறை, சங்கு முதலியன முழங்கும் திருவிழாக்கள் நிகழும் திருப்பராய்த்துறையில் எல்லோரும் புகழ்ந்து போற்ற எழுந்தருளிய இறைவர், வேதங்களை ஓதுபவர், மான் கன்றைக் கையின்கண் உடையவர், விடக்கறை கொண்ட கண்டத்தையுடையவர்.

1456    விடையுமேறுபவர் வெண்பொடிப்பூசுபவர்                                1.135.7
        சடையிற்கங்கை தரித்தவர்
        படைகொள்வெண்மழு வாளர்பராய்த்துறை
        அடையநின்ற அடிகளே

பொழிப்புரை: திருப்பராய்த்துறையிற் பொருந்தி விளங்கும் இறைவர், விடையேற்றினை ஊர்ந்து வருபவர், வெண்மையான திருநீற்றைப் பூசுபவர், சடையின்மேல் கங்கையைத் தரித்தவர், வெண்மையான மழுவைப் படைக்கருவியாகக் கொண்டவர்.

1457    தருக்கின்மிக்க தசக்கிரிவன்றனை                                         1.135.8
        நெருக்கினார்விர லொன்றினால்
        பருக்கினாரவர் போலும்பராய்த்துறை
        அருக்கன்றன்னை அடிகளே

பொழிப்புரை: திருப்பராய்த்துறையில் எழுந்தருளிய இறைவர், வலிமைமிக்க பத்துத் தலைகளையுடைய இராவணனைத் தம் கால்விரல் ஒன்றினால் நெரித்தவர், தக்கன் வேள்வியில் கதிரவனின் பற்களைத் தகர்த்தவர்.

1458    நாற்றமாமல ரானொடுமாலுமாய்த்                                                1.135.9
        தோற்றமும் மறியாதவர்
        பாற்றினார்வினை யானபராய்த்துறை
        ஆற்றல்மிக்க அடிகளே

பொழிப்புரை: திருப்பராய்த்துறையில் ஆற்றல் மிக்கவராய் விளங்கும் அடிகள், மணம் பொருந்திய தாமரை மலரில் விளங்கும் பிரமன், திருமால் ஆகியோரால் அடிமுடி அறியப் பெறாத தோற்றத்தினையுடையவர், தம்மை வழிபடுபவர்களின் வினைகளைப் போக்குபவர்.

1459    திருவிலிச்சில தேரமண்ஆதர்கள்                                         1.135.10
        உருவிலாவுரை கொள்ளேலும்
        பருவிலாலெயில் எய்துபராய்த்துறை
        மருவினான்றனை வாழ்த்துமே

பொழிப்புரை: புண்ணியமில்லாத சிலராகிய புத்தர்களும், சமணர்களாகிய கீழ்மக்களும் கூறும் பொருளற்ற அறவுரைகளைக் கேளாதீர், பெரிய மேருமலையாகிய வில்லால் முப்புரங்களை எய்தழித்து, உலகைக் காத்துத் திருப்பராய்த்துறையில் எழுந்தருளியிருக்கும் இறைவனை வாழ்த்துவீர்களாக!

1460    செல்வமல்கிய செல்வர்பராய்த்துறைச்                                    1.135.11
        செல்வர்மேற் சிதையாதன
        செல்வன்ஞான சம்பந்தன்செந்தமிழ்
        செல்வமாமிவை செப்பவே

பொழிப்புரை: பொருட்செல்வங்களால் நிறைந்து விளங்கும் சிவஞானச் செல்வர்கள் வாழும் திருப்பராய்த்துறையில் எழுந்தருளிய, வீடுபேறாகிய செல்வத்தையுடைய இறைவன்மீது, அருட்செல்வனாக விளங்கும் ஞானசம்பந்தன் அருளிய, அழிவற்ற இச்செந்தமிழ்ப் பாடல்களை ஓதினால், ஓதின அவர்கட்கு எல்லாச் செல்வங்களும் உண்டாகும்.

திருச்சிற்றம்பலம்

No comments:

Post a Comment