Sunday, 25 August 2013

திருக்குறள் - மூலமும் உரையும் (ஒரு இலக்கணப் பார்வையுடன்)

திருக்குறள் இயற்றி அரங்கேறிய நாளிலிருந்து இன்றுவரை அதற்குப் பலர், பல்வேறு காலகட்டங்களில் உரையெழுதியுள்ளனர். திருமூலர் மந்திரத்தில் “மரத்தை மறைத்தது மாமத யானை; மரத்தில் மறைந்தது மாமத யானை” என்று ஒரு வரி வரும். இதற்குப் பொருள், ஒரு குழந்தையின் கண்ணுக்கு யானை பொம்மையாகத் தெரியும் பொருளானது, ஒரு தச்சரின் கண்ணுக்கு நல்ல தரமான மரமாகத் தெரியும். இதுகாறும் பலர் திருக்குறளை மூலமாகவும் அதற்கு உரையாகவும் தந்திருக்கின்றார்கள். தேவைப்படும்போது மட்டும் அதாவது கல்விகற்கும்போது மட்டும் ஒன்றிரண்டு அதிகாரங்களை அதன் பொருள், குறட்பாக்களில் இடம்பெற்றிருக்கும் இலக்கணக் குறிப்புகள் மற்றும் அணியிலக்கணம் இவற்றை மதிப்பெண் பெறும் நோக்கத்துடன் மட்டுமே பயின்றுவந்திருக்கின்றோம். மனிதம் எல்லாவகையிலும் புனிதமடையும் நோக்கோடு, ஒரு மனிதன் கடைபிடிக்க வேண்டிய அறங்களை வலியுறுத்தும்விதமாக முதலில் அறத்துப்பாலையும், அவ்வாறு அறவழியில் நிற்பவர்கள், அவ்வழியினின்று வழுவாது பொருளீட்டும் வழிகளை வலியுறுத்தும் விதமாக பொருட்பாலையும், அறவழிநின்று பொருளீட்டிய மனிதன், அவ்வழி வழுவாது எவ்வாறு இன்பமாக வாழ வேண்டுமென்பதை வலியுறுத்தும் விதமாக இறுதியாக இன்பத்துப் பாலையும் கொண்டு திருவள்ளுவர் இயற்றிய திருக்குறளை வெறும் பொருளறியும் நோக்கோடு மற்றும் பாராது, தமிழிலக்கணம் மிக மிகச் செழிப்பாக இருந்த அவருடைய காலத்தில் அவரால் எழுதப்பட்ட திருக்குறள் எந்தளவுக்கு இலக்கண நெறிகளுக்குட் பட்டிருக்கின்றது என்பதை அறியும் ஒரு சிறுமுயற்சியாக இப்பணியைச் செய்துள்ளேன். முதல் குறட்பாவிலிருந்து கடைசி வரை அலகீட்டு வாய்ப்பாடு எழுதியபின்பு, அனைத்துக் குறட்பாக்களும் அலகிடுதலுக்குண்டான நெறிப்படி அமைந்துள்ளது கண்டு மிகவும் வியப்படைந்தேன். என்னாலியன்றவரை 1330 குறட்பாக்களிலுமுள்ள இலக்கணக் குறிப்பைத் தந்துள்ளேன். இதைப் படிக்கும் தமிழறிஞர்கள் என்னுடைய இந்தப் படைப்பை நன்கு ஆய்ந்து, அடியேன் செய்துள்ள தவறுகளைத் திருத்தி, விடுதல்களைச் சுட்டிக்காட்டி உதவுமாறு பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன்.