Thursday, 2 February 2012

இன்னா நாற்பது

இன்னா நாற்பது
முகவுரை

இன்னா நாற்பது என்பது கடைச்சங்கப் புலவர்களியற்றிய கீழ்க்கணக்கு நூல்களில் ஒன்று. இறையனார் களவியலுரையிற்கடைச் சங்கப் புலவர் பாடியவற்றைக் கூறிவருமிடத்தே கீழ்க் கணக்குகள் குறிக்கப்பட்டிலவேனும், பின்னுளோர் பலரும் அவையும் சங்கத்தார் பாடிய வென்றே துணிந்து எட்டுத் தொகை, பத்துப் பாட்டு, பதினெண் கீழ்க்கணக்கு என எண்ணி வருகின்றனர். கீழ்க்கணக்கியற்றிய ஆசிரியர்களுள் கபிலர், கூடலூர் கிழார் முதலிய சிலர் சங்கத்துச் சான்றோ ரென்பது ஒருதலை, கீழ்க்கணக்குப் பதினெட்டென்பது, தொல்காப்பியச் செய்யுளியலில்,

"வனப்பிய றானே வகுக்குங் காலைச்
சின்மென் மொழியாற் றாய பனுவலோ
டம்மை தானே யடிநிமிர் பின்றே"

என்னும் சூத்திர வுரையிற் பேராசிரியரும், நச்சினார்க்கினியரும் உரைக்குமாற்றா னறியலாவது. அவை அம்மையென்னும் வனப்புடையவாதலும் அவ்வுரையாற் றெளியப்படும்; பழைய பனுவல்களை அளவு முதலியனபற்றி மேற்கணக் கெனவும் கீழ்க்கணக்கெனவும் பின்னுள்ளோர் வகைப்படுத்தின ராவர்.

"அடிநிமிர் பில்லாச் செய்யுட் டொகுதி
யறம்பொரு ளின்ப மடுக்கி யவ்வத்
திறம்பட உரைப்பது கீழ்க்கணக் காகும்"

என்பது பன்னிரு பாட்டியல்.

கீழ்க்கணக்குகள் பதினெட்டாவன : நாலடியார், நான்மணிக்கடிகை, இன்னா நாற்பது, இனியவை நாற்பது, கார் நாற்பது, களவழி நாற்பது, ஐந்திணை யைம்பது, திணைமொழி யைம்பது, ஐந்திணை யெழுபது, திணைமாலை நூற்றைம்பது, திருக்குறள், திரிகடுகம், ஆசாரக்கோவை, பழமொழி, சிறுபஞ்சமூலம், இன்னிலை, முதுமொழிக்காஞ்சி, ஏலாதி, என்பன,

இதனை,

"நாலடி நான்மணி நானாற்ப தைந்திணைமுப்
பால்கடுகங் கோவை பழமொழி மாமூலம்
இன்னிலைசொற் காஞ்சியோ டேலாதி யென்பவே
கைந்நிலைய வாங்கீழ்க் கணக்கு"

என்னும் வெண்பாவா னறிக. இதில் ‘நால்' என்பதனை ‘ஐந்திணை' என்பதன் முன்னுங் கூட்டி நாலைந்திணையெனக் கொள்ள வேண்டும். சிலர் இன்னிலையை விடுத்துக் கைந்நிலையை ஒன்றாக்குவர். மற்றுஞ் சிலர் ஐந்திணையை ஐந்து நூலெனக்கொண்டு இன்னிலை, கைந்நிலை இரண்டனையும் ஒழித்திடுவர். அவர், ‘திணைமாலை' என்பதொரு நூல் பழைய வுரைகளாற் கருதப்படுவ துண்டாகலின் அதுவே ஐந்திணையுட் பிறிதொன்றாகல் வேண்டுமென்பர். முற்குறித்த வெண்பாவில் ‘ஐந்தொகை' ‘இன்னிலைய' ‘மெய்ந்நிலைய' ‘கைந்நிலையோடாம்' ‘நன்னிலையவாம்' என்றிவ்வாறெல்லாம் பாடவேற்றுமையும் காட்டுவர். கீழ்க்கணக்குகள் பதினெட்டேயாதல் வேண்டுமென்னுங் கொள்கையால் இவ்விடர்ப்பாடுகள் விளைகின்றன.

இனி, இன்னா நாற்பது என்னும் இந்நூலையியற்றினார் நல்லிசைப் புலவராகிய கபில ரென்பார். இவரது காலம் கி. பி. 50 முதல் 125 வரை ஆதல் வேண்டும். இவர் தமிழ்நாட்டு அந்தணருள் ஒருவர் இவர் அந்தணரென்பது ‘புலனழுக்கற்ற அந்தணாளன்' (புறம். 126) என மாறோக்கத்து நப்பசலையார் இவரைப் புகழ்ந்து கூறியிருத்தலானும், இவரே பாரிமகளிரை விச்சிக்கோன், இருங்கோவேன் என்பவர்களிடம் கொண்டு சென்று, அவர்களை மணந்து கொள்ளுமாறு வேண்டியபொழுது, ‘யானே, பரிசிலன் மன்னு மந்தணன்' (புறம். 200) என்றும், ‘அந்தணன் புலவன் கொண்டுவந்தனனே' (புறம். 201) என்றும் தம்மைக் கூறிக்கொண்டிருத்தலானும் பெறப்படுவதாகும். இவரது சமயம் சைவமே. இவர் இந்நூற் கடவுள் வாழ்த்தில் சிவபெருமானையடுத்து வேறு கடவுளரையுங் கூறியிருப்பது இவர்க்கு ஏனைக் கடவுளர்பால் வெறுப்பின்றென்பது மாத்திரையேயன்றி விருப்புண் டென்பதனையும் புலப்படுத்தாநிற்கும் சமயங்களின் கொள்கைகளும், சமயநெறி நிற்போர் நோக்கங்களும் அவ்வக்கால இயல்புக்கும் ஏனைச் சார்புகளுக்கும் ஏற்பப் பிழையின்றியோ பிழையாகவோ வேறுபாடெய்தி வருதல் உண்மைகாணும் விருப்புடன் நுணுகி ஆராய்ச்சி செய்வார்க்குப் புலனாகும்.

இனி, இவரியற்றிய பாட்டுகள் சங்கத்தார் தொகுத்து எட்டுத்தொகை, பத்துப்பாட்டு, பதினெண் கீழ்க்கணக்கு என்னும் மூன்று வகுப்பிலும் உள்ளன. பல நூறு புலவர்கள் பாடிய செய்யுட்களில் இவர் பாடியன ஏறக்குறைய பதினொன்றி லொருபங்காக இருத்தலும், அவை ஒவ்வொரு தொகையிலும் சேர்ந்திருத்தலும் இவரது பாட்டியற்றும் பெருமையையும் நன்மதிப்பையும் புலப்படுத்துகின்றன. இவரியற்றிய குறிஞ்சிப் பாட்டும், குறிஞ்சிக்கலியும் இயற்கை வளங்களை யெழில் பெற எடுத்துரைப்பதில் இணையற்ற பெருமை வாய்ந்தன. தமிழ்ச்சுவை யறியாதிருந்த ஆரியவரசன் பிரகத்தனுக்கு இவர் குறிஞ்சிப் பாட்டியற்றித் தமிழ் அறிவுறுத்தினார் என்பதிலிருந்து, தமிழின்பால் இவருக்கிருந்த பெரும் பற்றும், ஏனோரும் தமிழினையறிந்தின்புறவேண்டு மென்னும் இவரது பெரு விருப்பமும், தமிழின் சுவையறியாதோரும் அறிந்து புலவராகும்படி தெருட்டவல்ல இவரது பேராற்றலும் புலனாகின்றன. நச்சினார்க்கினியர் சேனாவரையர் பரிமேலழகர் முதலிய உரையாசிரியன்மாரெல்லாரும் ஆறாம் வேற்றுமைச் செய்யுட்கிழமைக்குக் ‘கபிலரது பாட்டு என்று உதாரணங் காட்டியுள்ளார்களென்றால் இங்ஙனம் சான்றோர் பலர்க்கும் எடுத்துக்காட்டாக முன்னிற்றற்குரிய இவர் பாட்டுக்களின் அருமை பெருமைகளை எங்ஙனம் அளவிட்டுரைக்கலாகும்?

இவ்வாறு புலமையிற் சிறந்துவிளங்கிய இவ்வாசிரியர் அன்பு, அருள், வாய்மை முதலிய உயர்குணனெல்லாம் ஒருங்கமையப் பெற்றவராயும் இருந்தார். இவரது பாட்டியற்றும் வன்மையையும், வாய்மையையும், மனத் தூய்மையையும், புகழ் மேம்பாட்டையும் சங்கத்துச் சான்றோர்களே ஒருங்கொப்பப் புகழ்ந்து கூறியுள்ளார்கள்.

"உலகுடன் றிரிதரும் பலர்புகழ் நல்லிசை
வாய்மொழிக் கபிலன்"
(அகம். 78)

என நக்கீரனாரும்,

"அரசவை பணிய அறம்புரிந்து வயங்கிய
மறம்புரி கொள்கை வயங்குசெந் நாவின்
உவலை கூராக் கவலையி னெஞ்சின்
நனவிற் பாடிய நல்லிசைக்
கபிலன்"
(பதிற்றுப்பத்து, 85)

எனப் பெருங்குன்றூர் கிழாரும்,
"தாழாது
செறுத்த செய்யுட் செய்செந் நாவின்
வெறுத்த கேள்வி விளங்குபுகழ்க் கபிலன்"
(புறம். 53)

எனப் பொருத்திலிளங்கீரனாரும்,

"நிலமிசைப் பிறந்த மக்கட் கெல்லாம்
புலனழுக் கற்ற வந்த ணாளன்
இரந்துசெல் மாக்கட் கினியிட னின்றிப்
பரந்திசை நிற்கப் பாடினன்"
(புறம். 127)

எனவும்,

"பொய்யா நாவிற் கபிலன்"
(புறம். 174)

எனவும் மாறோக்கத்து நப்பசலையாரும் பாடியிருத்தல் காண்க. இங்ஙனம் புலவரெல்லாரும் போற்றும் புலமையும் சான்றாண்மையும் உடையராய இவர்பால், அக்காலத்து வேந்தர்களும் வள்ளல்களும் எவ்வளவு மதிப்பு வைத்திருத்தல் வேண்டும்! வரையா வள்ளன்மையால் நிலமுழுதும் புகழ் பரப்பிய பறம்பிற்கோமானாகிய வேள்பாரி இவரை ஆரூயிர்த் துணையாகக் கொண்டொழுகினமையே, இவர்பால் அவ் வள்ளல் வைத்த பெருமதிப்புக்குச் சான்றாகும். சேரமான் செல்வக்கடுங்கோ வாழியாதன் என்னும் வேந்தர் பெருமான், இவர் பாடிய ஒரு பத்துப் பாடல்களுக்குப் பரிசிலாக நூறாயிரம் காணம் கொடுத்ததன்றி, ஒரு மலைமீதேறிக் கண்ட நாடெல்லாம் கொடுத்தான் என்றால், அவ்வரசன் இவர்பால் வைத்த மதிப்பினை அளவிடலாகுமோ? மாந்தரஞ்சேர லிரும்பொறை யென்ற சேரர்பெருமான் இப் புலவர் பெருந்தகை தமது காலத்தில் இல்லாது போனமைக்கு மனங்கவன்று ‘தாழாது, செறுத்த செய்யுட் செய்செந் நாவின் வெறுத்த கேள்வி விளங்குபுகழ்க் கபிலன், இன்றுள னாயின் நன்றுமன்' என்று இரங்கிக் கூறினன் இதுகேட்ட பொருந்தி லிளங்கீரனார் என்ற புலவர் அவ்வரசனைப் பாடுங்கால் இதனைக் கொண்டு மொழிந்தனர்.

இன்னணம் புலவரும், மன்னரும் போற்றும் புகழமைந்த இவர் தொல்லாணை நல்லாசிரியரும் ஆவர். இது, தமிழினை மதியாது இதில் நீதிகளல்லாமல், சிற்சில மக்களியற்கை முதலியவும் கூறப்பட்டுள. ஒரே கருத்துப் பலவிடத்தில் வெல்வேறு தொடர்களாற் கூறப்பட்டு மிருக்கிறது. இதிலுள்ள ‘இன்னா' என்னுஞ் சொற்குயாண்டும் துன்பம் என்றே பொருள் கூறிவந்திருப்பினும், சிலவிடத்து ‘இனிமையன்று' எனவும், சிலவிடத்துத் ‘தகுதியன்று' எனவும் இங்ஙனமாக ஏற்றபெற்றி கருத்துக் கொள்ளவேண்டும். கள்ளுண்டல், கவறாடல், ஊனுண்டல் என்பன இதிற் கடியப்பட்டுள்ளன. இந்நூலில் வந்துள்ள ‘ஊனைத்தின் றூனைப் பெருக்குதல் முன்னின்னா, ‘குழவிகளுற்ற பிணியின்னா', ‘கல்லா ருரைக்குங் கருமப் பொருளின்னா' என்னுந் தொடர்களோடு, இனியவை நாற்பதில் வந்துள்ள ‘ஊனைத்தின்றூனைப் பெருக்காமை முன்னினிதே,' ‘குழவி பிணியின்றி வாழ்தலினிதே', ‘கற்றறிந்தார் கூறுங் கருமப் பொருளினிதே' என்னுந் தொடர்கள் ஒற்றுமை யுறுதல் காண்க.

இந்நூற்குப் பழைய பொழிப்புரை யொன்றுளது. சின்னாளின் முன்புஞ் சிலர் உரையெழுதி வெளிப்படுத்தியிருக்கின்றனர். நம் தமிழன்னைக்கு அரிய தொண்டுகள் பல ஆற்றிப் போற்றி வரும் திருநெல்வேலி, தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகத்தினர் விரும்பியவாறு இப்புதியவுரை பலமேற்கோளுடன் என்னால் எழுதப்பெறுவதாயிற்று. பல சுவடிகள் பார்த்துப் பாட வேற்றுமையும் காட்டப்பெற்றுள்ளது. இதிற் காணப்படும் குற்றங்குறைகளைப் பொறுத்தருளி எனக்கு ஊக்கமளிக்குமாறு அறிஞர்களை வேண்டிக் கொள்கிறேன்.

"ஞால நின்புக ழேமிக வேண்டும்தென்
னால வாயி லுறையுமெம் மாதியே."

இங்ஙனம்
ந. மு. வேங்கடசாமி.
இன்னா நாற்பது

கடவுள் வாழ்த்து

1. முக்கட் பகவ னடி தொழர் தார்க்கின்னா
பொற்பனை வெள்ளையை1 யுள்ளா தொழுகின்னா
சக்கரத் தானை மறப்பின்னா2 வாங்கின்னா
சத்தியான் றாடொழா தார்க்கு.

(பாடம்) 1.பொற்பன வெள்ளியை பொற்பன வூர்தியை
2. மன்றப்பின்னாது

(பதவுரை.) முக்கண் பகவன் - மூன்று கண்களையுடைய இறைவனாகிய சிவபெருமானுடைய, அடி- திருவடிகளை, தொழாதார்க்கு - வணங்காதவர்களுக்கு, இன்னா - துன்பமுண்டாம்; பொன் பனை வெள்ளையை - அழகிய பனைக் கொடியையுடையவனாகிய பலராமனை, உள்ளாது - நினையாமல், ஒழுகு - நடத்தல், இன்னா - துன்பமாம்; சக்கரத்தானை திகிரிப்படையயையுடையவனாகிய மாயோனை, மறப்பு மறத்தல், இன்னா - துன்பமாம்; ஆங்கு - அவ்வாறே, சத்தியான் வேற்படையை யுடையவனாகிய முருகக் கடவுளின், தான் திருவடிகளை, தொழாதார்க்கு - வணங்காதவர்களுக்கு, இன்னா - துன்ப மூண்டாகும் எ-று.
முக்கண் - பகலவன் திங்கள் எரி யென்னும் முச்சுடராகிய மூன்று நாட்டங்கள். பகவன் - பகம் எனப்படும் ஆறு குணங்களையும் உடையவன். அறுகுணமாவன : முற்றறிவு, வரம்பிலின்பம், இயற்கையுணர்வு, தன்வயம், குறைவிலாற்றல், வரம்பிலாற்றல், என்பன. பகவன் என்பது பொதுப்பெயராயினும் ‘முக்கண்' என்னுங் குறிப்பால் இறைவனை யுணர்த்திற்று; இறைவனுக்கு உண்மையும் ஏனையர்க்கு முகமனும் எனக் கொள்ளலுமாம்.

"ஏற்றுவலனுயரிய வெரிமரு ளவிர்சடை
மாற்றருங் கணிச்சி மணிமிடற் றோனுங்
கடல்வளர் புரிவளை புரையு மேனி
யடல்வெந் நாஞ்சிற் பனைக்கொடி யோனு
மண்ணுறு திருமணி புரையு மேனி
விண்ணுயர் புட்கொடி விறல்வெய் யோனு
மணிமயி லுயரிய மாறா வென்றிப்
பிணிமுக வூர்தி யொண்செய் யோனுமென
ஞாலங் காக்குங் கால முன்பிற்
றோலா நல்லிசை நால்வ ருள்ளும்"

என்னும் புறப்பாட்டால்பலராமனைக்கூறுதல் தமிழ் வழக்காதலுணர்க. பலராமன் வெண்ணிற முடையனாகலின் வெள்ளை எனப்பட்டான். பொற்பனவூர்தி என்னும் பாடத்திற்கு அழகிய அன்ன வாகனத்தையுடைய பிரமன் என்று பொருள் கூறிக்கொள்க இனியவை நாற்பதில் அயனையும் வாழ்த்தினரை காண்க. ஒழுகு முதனிலைத் தொழிற்பெயர்.

நூல்

1. பந்தமில் லாத மனையின் வனப்பின்னா
தந்தையில் லாத புதல்வ னழகின்னா
அந்தண ரில்லிருந் தூணின்னா1வாங்கின்னா
மந்திரம் வாயா விடின்.

(பாடம்) 1.ஊணின்னாது.

(ப-ரை.) பந்தம் இல்லாத - சுற்றமில்லாத, மனையின் இல்வாழ்க்கையின், வனப்பு - அழகானது, இன்னா - துன்பமாம் தந்தையில்லாத - பிதா, இல்லாத, புதல்வன் - பிள்ளையினது, அழகு - அழகானது, இன்னா - துன்பமாம்; அந்தணர் - துறவோர், இல் இருந்து - வீட்டிலிருந்து, ஊண் - உண்ணுதல், இன்னா துன்பமாம் ஆங்கு - அவ்வாறே, மந்திரம் - மறைமொழியாய மந்திரங்கள், வாயாவிடின் - பயனளிக்காவிடின், இன்னா துன்பமாம் எ-று.

பந்தம் - கட்டு; சுற்றத்திற்காயிற்று. மனை - மனைவாழ்க்கை அதன் வனப்பாவது செல்வம். "சுற்றத்தாற் சுற்றப் படவொழுகல் செல்வந்தான் பெற்றத்தாற் பெற்ற பயன்" என்பவாகலின் சுற்றமில்லாத மனையின் வனப்பு இன்னாவாயிற்று. இனி, அன்பில்லாத இல்லாளின் அழகு, இன்னாவாம் எனினும் அமையும் ‘தந்தையொடு கல்வி போம்'. ஆதலின் ‘தந்தையில்லாத' என்றதனால் கல்விப் பேற்றையிழந்த, என்னும் பொருள் கொள்ளப்படும். அந்தணர் துறவோர் இதனை, ‘அந்தண ரென்போ ரறவோர்மற் றெவ்வுயிர்க்குஞ், செந்தண்மை பூண்டொழுக லான்' என்னும் பொய்யா மொழியா னறிக. துறவறத்தினர் காட்டில் கனி கிழங்கு முதலிய உண்டலேனும், நாட்டில் ஒருவழித் தங்காது திரிந்த இரந்துண்டலேனும், செயற்பாலரன்றி, ஒரு மனையின்கட்டங்கியுண்ணற்பாலரல்ல ரென்க. மந்திரம் இன்னதென்பதனை 'நிறைமொழி மாந்தராணையிற் கிளந்த மறைமொழி தானே மந்திரமென்ப' என்னும் தொல்காப்பியத்தா னறிக. மந்திரம் அமைச்சரது சூழ்ச்சி எனப்பொருள் கோடலும் ஆம்; சூழாது செய்யும் வினை துன்பம் பயக்கு மென்பது கருத்து.

2. பார்ப்பாரிற் கோழியு நாயும் புகலின்னா
ஆர்த்த மனைவி யடங்காமை நன்கின்னா
பாத்தில் புடைவை யுடையின்னா1வாங்கின்னா
காப்பாற்றா வேந்த னுலகு.

(பாடம்) 1.உடையின்னாது.

(ப-ரை.) பார்ப்பார் - பார்ப்பாருடைய, இல் - மனையில், கோழியும் நாயும், புகல் - நுழைதல், இன்னா - துன்பமாம்; ஆர்த்த - கலியாணஞ் செய்துகொண்ட, மனைவி - மனையாள் அடங்காமை - (கொழுநனுக்கு) அடங்கி நடவாமை, நன்கு இன்னா - மிகவுந் துன்பமாம்; பாத்துஇல் - பகுப்பு இல்லாத, புடைவை - புடைவையை, உடை - உடுத்தல், இன்னா - துன்பமாம், ஆங்கு அவ்வாறே, உலகு - நாடு, இன்னா - துன்பமாம் எ-று.

பார்ப்பாரில்லிற் கோழியும் நாயும் புகலாகாதென்பதனை ‘மனையுறைகோழியொடு ஞமலி துன்னாது' என்னும் பெரும்பாணாற்றுப்படையடியானு மறிக. ஆர்த்தல் - கட்டுதல்; அது தொடர் புண்டாமாறு கலியாணஞ் செய்து கொள்ளுதலையுணர்த்திற்று. அடங்காமை - எறியென் றெதிர் நிற்றல் முதலியன. பாத்து பகுத்து என்பதன் மரூஉ : ஈண்டுத் தொழிற்பெயர் சிலப்பதிகாரத்தில் ‘பாத்தில் பழம்பொருள்' என வருதலுங் காண்க. புடைவை - ஆடவருடையையும் குறிக்கும். ‘பாத்தில் புடைவையுடையின்னா' என்றதனாற் சொல்லியது ஒன்றுடுத்தலாகாதென்பதாம். ‘ஒன்றம ருடுக்கை' என்னும்பெரும்பாணாற்றடி ஒன்றுடாமையே தகுதியென்பது காட்டி நிற்கின்றது. காப்பு ஆற்றா - காத்தலைச் செய்யாத : ஒரு சொல்லுமாம்.

3. கொடுங்கோல் மறமன்னர் கீழ்வாழ்த லின்னா
நெடுநீர் புணையின்றி நீந்துத லின்னா
கடுமொழி யாளர் தொடர்பின்னா வின்னா
தடுமாறி வாழ்த லுயிர்க்கு.

(ப-ரை.)கொடுங்கோல் - கொடுங்கோல் செலுத்தும், மறம் கொலைத் தொழிலையுடைய, மன்னர்கீழ் - அரசரது ஆட்சியின் கீழ், வாழ்தல் - வாழ்வது, இன்னா துன்பமாம்; நெடுநீர் மிக்க நீரை, புணை இன்றி - தெப்பமில்லாமல், நீந்துதல் - கடந்து செல்லுதல், இன்னா - துன்பமாம்; கடுமொழியாளர் - வன்சொல் கூறுவோரது, தொடர்பு - நட்பு, இன்னா - துன்பமாம்; உயிர்க்கு உயிர்களுக்கு, தடுமாறி, - மனத்தடுமாற்ற மடைந்து, வாழ்தல் வாழ்வது, இன்னா - துன்பமாம் எ-று.

கொடுங்கோல் - வளைந்த கோல்; அரச நீதியாகிய முறையினைச் செங்கோல் என்றும், முறையின்மையைக் கொடுங்கோல் என்றும் கூறுதல் வழக்கு : இவை ஒப்பினாகிய பெயர். மன்னர் என்பது அவரது ஆட்சிக்காயிற்று. கடுமொழியாளர் - மிகுதிக் கண் கழறிக் கூறுமுறையன்றி, எம்பொழுதும் வன்சொல்லே கூறுமியல்பினர் என்றபடி, தடுமாற்றம் - வறுமை முதலியவற்றாலுண்டாகும் மனவமைதி யின்மையாகிய துன்பம் உயிரென்றது ஈண்டு மக்களுயிரை.

4. எருதி லுழவர்க்குப் போகீர மின்னா
கருவிகண் மாறிப் புறங்கொடுத்த லின்னா
திருவுடை யாரைச் செறலின்னா வின்னா
பெருவலியார்க் கின்னா செயல்.

(ப-ரை.) எருது இல் - (உழவுக்குரிய) எருது இல்லாத - உழவர்க்கு - உழுதொழிலாளர்க்கு, போகு ஈரம் - அருகிய ஈரம் , இன்னா - துன்பமாம்; கருவி - படையின் தொகுதி, கண்மாறி, நிலையழிந்து, புறங்கொடுத்தல் - முதுகு காட்டுதல், இன்னா - துன்பந் தருவதாகும்; திரு உடையாரை - (மிக்க) செல்வமுடையவர் பால், செறல் - செற்றங் கொள்ளல், இன்னா - துன்பந் தருவதாகும்; பெருவலியார்க்கு - மிக்க திறலுடையார்க்கு, இன்னா செயல் - தீமை செய்தல், இன்னா துன்பந் தருவதாகும் எ-று

போகுதல் - அருகுதல், ஒழித்தல்; ‘மன்னர் மலைத்தல் போகிய' என்புழி இப் பொருட்டாதல் காண்க. கருவி - தொகுதி; ஈண்டுப்படையது தொகுதி யென்க. கண்மாறி : ஒரு சொல் :ஆங்கவனீங்கெனையகன்று கண்மாறி' என்புழிபோல. இனி, கண்மாறியென்பதற்கு அரசனிடத் தன்பின்றி எனப்பொருள் கொள்ளலுமாம். கருவிகள் மாறி எனப் பிரித்தல் பொருந்து மேற் கொள்க. பெருவலியார் - பொருள் படை முதலியவற்றாற் பெருவலி யுடையராய அரசரும், தவத்தால் ஒன்னார்த் தெறலும் உவந்தாரை யாக்கலுமாம். பெருவலி பெற்றுடையராய முனிவரும் ஆம்; பெருவலியார்க் கின்னா செயல் துன்பந் தரும் என்பதனைக், ‘கூற்றத்தைக் கையால் விளித்தற்றா லாற்றுவார்க், காற்றாதாரின்னாசெயல்' என்னுந் திருவள்ளுவப் பயனாலுமறிக.

5. சிறையில் கரும்பினைக் காத்தோம்ப லின்னா
உறைசேர்1பழங்கூரை சேர்ந்தொழுக லின்னா
முறையின்றி யாளு மரசின்னா வின்னா
மறையின்றிச் செய்யும் வினை.

(பாடம்) 1. புரைசேர்,

(ப-ரை.) சிறைஇல் - வேலியில்லாத, கரும்பினை - கரும்புப்பயிரை, காத்து ஓம்பல் - பாதுகாத்தல், இன்னா - துன்பமாம்; உறைசேர் - மழைத்துளி ஒழுகுதலையுடைய, பழங்கூரை - பழைய கூரையையுடைய மனையில், சேர்ந்து ஒழுகல் - பொருந்தி வாழ்தல், இன்னா - துன்பமாம்; முறை இன்றி - நீதி யில்லாமல், ஆளும் - ஆளுகின்ற, அரசு - அரசரது ஆட்சி, இன்னா - துன்பமாம்; மறை இன்றி - சூழ்தலில்லாமல், செய்யும், வினை - செய்யுங் கருமம், இன்னா - துன்பந் தருவதாகும் எ-று.

காத்தோம்பல் : ஒரு பொரு ளிருசொல் உறைசேர் பழங்கூரை என்றது செய்கையழிந்து சிதைவுற்று மழைநீர் உள்ளிழியுஞ் சிறு கூரையினை. அரசு - அரசனுமாம் அரசன் முறையிலனாயின் முறையிழத்தலானேயன்றி மழையின்மையாலும் நாடு துன்புறும்; முறைகோடி மன்னவன் செய்யி னுறைகோடி, யொல்லாது வானம் பெயல்' என்பது காண்க. அமைச்சருடன் மறைவிற் செய்யப் படுவதாகலின் சூழ்ச்சி மறையெனப் பட்டது.;

6. அறமனத்தார் கூறுங் கடுமொழியு மின்னா2
மறமனத்தார் ஞாட்பின் மடிந்தொழுக லின்னா
இடும்பை யுடையார் கொடையின்னா வின்னா
கொடும்பா டுடையார்வாய்ச் சொல்.

(பாடம்) 2. கடுமொழியின்னா,

(ப-ரை.) அறம் மனத்தார் - அறத்தை விரும்பும் நெஞ்சத்தினர், கூறும் - சொல்லுகின்ற, கடுமொழியும் - கடுஞ் சொல்லும் இன்னா - துன்பமாம்; மறம் மனத்தார்- வீரத் தன்மையையுடைய நெஞ்சத்தினர், ஞாட்பில் போரின்கண், மடிந்து ஒழுகல் சோம்பி இருத்தல், இன்னா - துன்பமாம்; இடும்பை உடையார் - வறுமை உடையாரது, கொடை - ஈகைத் தன்மை, இன்னா துன்பமாம்; கொடும்பாடு உடையார் - கொடுமையுடையாரது, வாய்ச்சொல் - வாயிற் சொல்லும், இன்னா - துன்பமாம்
எ-று.

‘அழுக்கா றவாவெகுளி யின்னாச்சொ னான்கும், இழுக்கா வியன்ற தறம் 'என்பவாகலின் அறமனத்தார் கூறுங் கடு மொழியும் இன்னாவாயிற்று. உம்மை : எச்சப்பொருளது. இடும்பை - துன்பம்; ஈண்டுக் காரணமாய வறுமைமேல் நின்றது. ‘வளமிலாப் போழ் தத்து வள்ளன்மை குற்றம்'என்று பிற சான்றோருங் கூறினர். கொடும்பாடு -கொடுமை : ஒரு சொல். ‘அருங்கொடும்பாடுகன் செய்துஎன்பதுதிருச்சிற்றம்பலக் கோவையார்; நடுவுநிலை யின்மையும் ஆம். வாய்ச்சொல் என வேண்டாது கூறியது தீமையே பயின்ற தென வேண்டியது முடித்தற்கு. வாய்ச்சொல்லும் என்னும் உம்மை தொக்கது..

7. ஆற்ற லிலாதான் பிடித்த படையின்னா
நாற்ற மிலாத மலரி னழகின்னா
தேற்ற மிலாதான் றுணிவின்னா வாங்கின்னா
மாற்ற மறியா னுரை.

(ப-ரை.) ஆற்றல் இலாதான் - வலியில்லாதவன், பிடித்த படை கையிற்பிடித்த படைக்கலம், இன்னா - துன்பமாம்; நாற்றம் இலாத - மணமில்லாத, மலரின் அழகு – பூவின் அழகானது. இன்னா - துன்பமாம்; தேற்றம் இலாதான் - தெளிவு இல்லாதவன், துணிவு - ஒரு வினை செய்யத்துணிதல், இன்னா - துன்பமாம்; ஆங்கு - அவ்வாறே மாற்றம் - சொல்லின் கூறுபாட்டினை, அறியான் - அறியாதவனது உரை - சொல், இன்னா - துன்பமாம் எ-று.
ஆற்றல் - ஈண்டு ஆண்மை யெனினும் ஆம், ‘வானொடென் வன்கண்ண ரல்லார்க்கு என்பது காண்க. தேற்றம் - ஆராய்ந்து தெளிதல்; ‘தெளிவி லதனைத் தொடங்கார் என்பது வாயுறை வாழ்த்து. மாற்றம் - பேசு முறைமை யென்றும், எதிருரைக்கும் மொழியென்றும் கூறலுமாம்.

8. பகல்போலு நெஞ்சத்தார் பண்பின்மை யின்னா
நகையாய நண்பினார் நாரின்மை யின்னா
இகலி னெழுந்தவ ரோட்டின்னா வின்னா
நயமின் மனத்தவர் நட்பு.

(ப-ரை.) பகல்போலும் -ஞாயிறுபோலும், நெஞ்சத்தார் - மனமுடையார், பண்பு இன்மை - பண்பில்லா திருத்தல், இன்னா துன்பமாம்; நகை ஆய - நகுதலையுடைய, நண்பினார் - நட்பாளர்; நார் இன்மை - அன்பில்லா திருத்தல், இன்னா துன்பமாம்; இகலின் எழுந்தவர் - போரின்கண் ஏற்றெழுந்தவர், ஒட்டு - புறங்காட்டி யோடுதல், இன்னா - துன்பமாம்; நயம்இல் நீதியில்லாத, மனத்தவர் - நெஞ்சினையுடையாரது; நட்பு - கேண்மை, இன்னா - துன்பமாம் எ-று.

பகல்போலும் நெஞ்சம்- ஞாயிறு திரிபின்றி ஒரு பெற்றித்தாதல் போலத் திரிபில்லாத வாய்மையையுடைய நெஞ்சம்;‘ஞாயிறன்ன வாய்மையும்'என்பது புறம். இனி நுகத்தின் பகலாணி போல் நடுவுநிலை யுடைய நெஞ்சம் எனினும் பொருந்தும். "நெடுநுகத்துப் பகல்போல, நடுவு நின்ற நன்னெஞ்சீனோர்" என்பது பட்டினப்பாலை பண்பாவது உலகவியற்கை யறிந்து யாவரொடும் பொருந்தி நடக்கும் முறைமை. "பண்பெனப் படுவது பாடறிந்தொழுகல்" என்பது கலித்தொகைதூயமனமுடையரேனும் உலகத்தோடு பொருந்தி நடவாமை தீதென்பதாம் நகையாய நண்பீனார்நாரின்மையாவது, முகத்தால் நகுதல் செய்து அகத்தே அன்பு கருங்குதல். நயம் - நீதி யென்னும் பொருளதாதலைத் திருக்குறள் பரிமேலழகருரை நோக்கித் தெளிக; இனிமை யெனவும் விருப்பம் எனவும் பொருள் கூறலும் ஆம்.

9. கள்ளில்லா மூதூர் களிகட்கு நன்கின்னா
வள்ளல்க ளின்மை பரிசிலர்க்கு முன்னின்னா
வண்மை யிலாளர் வனப்பின்னா வாங்கின்னா
பண்ணில் புரவி பரிப்பு.

(ப-ரை.) கள் இல்லா - கள் இல்லாத, மூதூர் - பழைமையாகியஊர், களிகட்கு - கள்ளுண்டு களிப்பார்க்கு, நன்கு, இன்னா- மிகவுந் துன்பமாம்; வள்ளல்கள் - வள்ளியோர், இன்மை- இல்லா திருத்தல், பரிசிலர்க்கு - (பரிசில் பெறும்)இரவலர்க்கு, முன் இன்னா - மிகவுந் துன்பமாம்; வண்மைஇலாளர் - ஈகைக்குண மில்லாதவர்களுடைய, வனப்பு - அழகு,இன்னா - துன்பமாம்; ஆங்கு - அவ்வாறே, பண் இல் -கலனையில்லாத, புரவி - குதிரை, பரிப்பு - தாங்குதல்இன்னா - துன்பமாம் எ-று.

களிகட்கு இன்னா என்றது எடுத்துக்காட்டுமாத்திரையே, களித்த லென்னுஞ் சொல் கள்ளுண்டு மகிழ்தல்என்னும் பொருளில் முன் வழங்கியது; இக் காலத்தேபொதுப்பட மகிழ்தல் என்னும் பொருளதாயிற்று. களி- கள்ளுண்போன் முன் : மிகுதி யென்னும் பொருளது. பண் கலனை ; இது கல்லணையெனவும் வழங்கும்.

10. பொருளுணர்வா ரில்வழிப் பாட்டுரைத்த லின்னா
இருள்கூர் சிறுநெறி தாந்தனிப்போக் கின்னா
அருளில்லார் தங்கட் செலவின்னா வின்னா
பொருளில்லார் வண்மை புரிவு.

(ப-ரை.) பொருள் உணர்வார் - (பாட்டின்) பொருளை அறியும் அறிவுடையார், இல்வழி - இல்லாத இடத்தில், பாட்டு உரைத்தல் செய்யுளியற்றிக் கூ.றுதல், இன்னா - துன்பமாம்; இருள் கூர் - இருள் மிகுந்த, சிறுநெறி - சிறிய வழியிலே, தனி போக்கு - தனியாகப் போகுதல், இன்னா - துன்பமாம் ; அருள் இல்லார் தம்கண் தண்ணளி யில்லாதவரிடத்தில். செலவு - (இரப்போர்) செல்லுதல் ; இன்னா துன்பமாம் ; பொருள் இல்லார் பொருளில்லாதவர், வண்மை புரிவு ஈதலை - விரும்புதல், இன்னா - துன்பமாம் எ-று.

புலவராயினார் பாட்டின் பொருளுணரும் அறிவில்லார்பால் தாம் அரிதிற் பாடிய பாட்டுக்களைக்கூறின், அவர் அவற்றின் பொருளை அறியாராகலின், தம்மை நன்கு மதித்தல் செய்யார் அதுவேயன்றி இகழ்தலுஞ் செய்வர் ; அவற்றின் மிக்க துன்பம் பிறிதில்லை யாகலின் ‘பொருளுணர்வா ரில்வழிப் பாட்டுரை தலின்னா' எனப்பட்டது.

"புலமிக் கவரைப் புலமை தெரிதல்
புலமிக் கவர்க்கே புலனாம்"
‘கல்லா தவரிடைக் கட்டுரையின் மிக்கதோர்
பொல்லாத தில்லை யொருவற்கு'
என்னும் பழமொழிச் செய்யுட்கள் இங்கே கருதற்பாலன. தாம்அசை. தம் : சாரியை.

11. உடம்பா டில்லாத மனைவிதோ ளின்னா1
இடனில் சிறியாரோ டியர்த்தநண் பின்னா
இடங்கழி யாளர் தொடர்பின்னா வின்னா
கடனுடையார் காணப் புகல்.

(பாடம்) 1. மனைவி தொழி லின்னா.

(ப-ரை.) உடம்பாடு இலாத - உளம் பொருந்துலில்லாத மனைவி தோள் - மனைவியின் தோளைச் சேர்தல், இன்னா - துன்ப மாம்; இடன் இல் . விரிந்த வுள்ளமில்லாத, சிறியாரோடு - சிறுமையுடையாருடன்; யாத்த நண்பு - பிணித்த நட்பு; இன்னா - துன்பமாம்; இடங்கழியாளர் - மிக்க காமத்தினை யுடையாரது, தொடர் - சேர்க்கை, இன்னா - துன்பமாம்; இடங்கழியாளர் மிக்க காமத்தினை யுடையாரது, தொடர் - சேர்க்கை, இன்னா - துன்பமாம்; கடன் உடையார் - கடன் கொடுத்தவர், காண பார்க்கமாறு, புகல் - அவர்க்கெதிரே செல்லுதல், இன்னா - துன்பமாம் எ-று.

மனைவிதோள் : இடக்கரடக்கல். ‘உடம்பா டிலாதவர் வாழ்க்கை குடங்கருட், பாம்போ டுடனுறைந் தற்று' என்னுங் குறள் இங்கு நினைக்கற்பாலது. இடனென்றது ஈண்டு உள்ள விரிவை யுணர்த்திற்று. குற்றியலிகரம் அலகு பெறாதாயிற்று. இடங்கழி - உள்ளம் நெறிப்படாதோடுதல்; கழி காமம் என்பது கருத்து; ‘இடங்கழி காமமொடடங்கானாகி' என்பது மணிமேகலை. சிலர் ‘விடங்களியாளர்' எனப் பாடங்கொண்டு, விடம்போலும் கள்ளுண்டு களிப்போர் எனப் பொருள் கூறினர்; அது பொருந்தாமை யோர்க.‘கடன் கொண்டான் றோன்றப் பொருள் தோன்றும்' ஆகலின், ‘காணப்புகல் இன்னா' என்றார்; கடன்படுதல் என்பது கருத்தாகக் கொள்க.

12. தலைதண்ட மாகச் சுரம்போத லின்னா
வலைசுமந் துண்பான் பெருமித மின்னா
புலையுள்ளி வாழ்த லுயிர்க்கின்னா வின்னா
முலையில்லாள் பெண்மை விழைவு.

(ப-ரை.) தலை தண்டம் ஆக - தலை அறுபடும்படி, சுரம் போதல் - காட்டின்கட் செல்லுதல், இன்னா - துன்பமாம், வலை சுமந்து - வலையைச் சுமந்து, உண்பான் - அதனால் உண்டு வாழ்வானது, பெருமிதம் - செருக்கு, இன்னா - துன்பமாம்; புலை - புலால் உண்ணுதலை, உள்ளி - விரும்பி, வாழ்தல் - வாழ்வது, உயிர்க்கு - (மக்கள்) உயிர்க்கு, இன்னா - துன்பமாம். முலை இல்லாள் - முலையில்லாதவள், பெண்மை – பெண்தன்மையை, விழைவு - விரும்புதல், இன்னா - துன்பமாம் எ-று.

வலைசுமந்து என்னுங் காரணம் காரியத்தின்மேற்று. புலை புன்மை : தன்னுயிரோம்பப் பிறவுயிர் கொன்றுணல் சிறுமையாகலின். அது புலை யெனப்படும். பெண்மை விழைவு இன்னா என் என்றது கடைபோகாதாகலின், ‘கல்லாதான் சொற்கா முறுதல் முலையிரண்டு, மில்லாதான் பெண்காமுற் றற்று' என்பதுங் காண்க.

13. மணியிலாக் குஞ்சரம் வேந்தூர்த லின்னா
துணிவில்லார் சொல்லுந் தறுகண்மை யின்னா
பணியாத மன்னர்ப் பணிவின்னா வின்னா
பிணியன்னார் வாழு மனை.

(ப-ரை.) மணி இலா - [ஓசையினால் தன் வருகையைப் பிறர்க்கு அறிவிக்கும்] மணியை அணியப்பெறாத, குஞ்சரம் - யானையை, வேந்து - அரசன், ஊர்தல் - ஏறிச்செல்லுதல், இன்னா துன்பமாம்; துணிவு இல்லார் - பகையை வெல்லுந் துணிவில்லாதார், சொல்லும் - கூறும், தறுகண்மை - வீரமொழிகள், இன்னா துன்பமாம், பணியாத - வணங்கத்தகாத, மன்னர் - அரசரை, பணிவு - வணங்குதல், இன்னா - துன்பமாம்; பிணி அன்னார் (கணவருக்குப்) பிணிபோலும் மனைவியர், வாழும் மனை வாழ்கின்ற இல், இன்னா - துன்பமாம் எ-று.

சொல்லும் என்றதனால் தறு கண்மை மொழிக்காயிற்று; வஞ்சினமும் ஆம். பணியாத மன்னராவார் தம்மிற் றாழ்ந்தோர். பணிதல் - இன்சொல்லும் கொடையும். ‘எள்ளாத வெண்ணிச் செயல் வேண்டுந் தம்மொடு கொள்ளாத கொள்ளா துலகு' என்றபடி, தாம் வலியராய் வைத்து மெலிய பகைவரை வணங்குதல் எள்ளற் கேதுவாகலின் ‘பணிவின்னா' என்றார். ‘மன்னர் பணிவு' என்று பாடமாயின், அகத்தே பணிதலில்லாத பகை மன்னரது புற வணக்கம் இன்னாவாம் என்று பொருள் கூறிக்கொள்க. ‘சொல் வணக்க மொன்னார்கட் கொள்ளற்க'‘தொழுத கையுள்ளும் படையொடுங்கும்' என்பன இங்கே கருதற்பாலன. பிணிபோறல் - சிறு காலை அட்டில் புகாமை முதலியன.

14. வணரொலி1யைம்பாலார் வஞ்சித்த லின்னா
துணர் தூங்கு மாவின் படுபழ மின்னா
புணர்பாவை யன்னார் பிரிவின்னா வின்னா
உணர்வா ருணராக் கடை.

(பாடம்) 1. வணரொளி.

(ப-ரை.) வணர் - குழற்சியையுடைய, ஒலி - தழைத்த, ஐம்பாலார் - கூந்தலையுடைய மகளிர், வஞ்சித்தல் (தம் கணவரை) வஞ்சித் தொழுகுதல், இன்னா - துன்பமாம்; துணர் கொத்தாக, தூங்கும் - தொங்குகின்ற, மாவின் - மாவினது, படு பழம் - நைந்து விழுந்த கனி, இன்னா - துன்பமாம்; புணர் - வேற்றுமையின்றிப் பொருந்திய, பாவை அன்னார் - பாவைபோலும் மகளிரது, பிரிவு - பிரிதல், இன்னா - துன்பமாம்; உணர்வார் - அறியுந் தன்மையர், உணராக் கடை - அறியாவிடத்து, இன்னா - துன்பமாம் எ-று.

வணர் - வளைவு; ஈண்டுக் குழற்சி. ஒலி - தழைத்தல்; இஃதிப் பொருட்டாதலை ‘ஒலிநெடும் பீலி ' என்னும் நெடுநல்வாடையடி உரையானறிக. ஐம்பால் - ஐந்து பகுப்பினை யுடையது கூந்தல் ஐந்து பகுப்பாவன : குழல், கொண்டை, சுருள், பனிச்சை, முடியென்ப. இங்ஙனம் ஒரோவொருகால் ஒவ்வொருவகையாகவன்றி ஒரொப்பனை யிற்றானே ஐந்து வகையாற் பிரித்து முடிக்கப் படுவது என்று கோடலும் ஆம். படு பழம் - செவ்வியழிந்து விழுந்த பழம் புணர்தல் அன்பால் நெஞ்சு கலத்தல் : மணம் பொருந்துதலும் ஆம். உணர்வார் - உணர்ந்து குறை தீர்க்க வல்லார்; பாட்டின் பொருளறிவாரும் ஆம்.

15. புல்லார் புரவி மணியின்றி யூர்வின்னா
கல்லா ருரைக்குங் கருமப் பொருளின்னா
இல்லாதார் நல்ல விருப்பின்னா1வாங்கின்னா
பல்லாரு ணாணப் படல்.

(பாடம்) 1.விழைவின்னா.

(ப-ரை.) புல் - புல்லை, ஆர் - உண்கின்ற; புரவி - குதிரையை, மணி இன்றி - மணி யில்லாமல், ஊர்வு - ஏறிச் செலுத்துதல், இன்னா - துன்பமாம்; கல்லார் உரைக்கும் - கல்வியில்லாதார் கூறும், கருமப் பொருள் - காரியத்தின் பயன், இன்னா - துன்பமாம்; இல்லாதார் - பொருளில்லாதவரது, நல்ல விருப்பு - நல்லவற்றை விரும்பும் விருப்பம், இன்னா - துன்பமாம்; ஆங்கு - அவ்வாறே, பல்லாருள் - பலர் நடுவே, நாணப்படல் - நாணப்படுதல், இன்னா - துன்பமாம் எ-று ஊர்வு : தொழிற்பெயர். பொருள் - பயன், நல்ல - அறம் நுகரப்படுவனவும் ஆம். நாணப்படல் - மானக்கேடெய்துதல்.

16. உண்ணாது வைக்கும் பெரும்பொருள் வைப்பின்னா
நண்ணாப் பகைவர் புணர்ச்சி நனியின்னா
கண்ணி லொருவன் வனப்பின்னா வாங்கின்னா
எண்ணிலான் செய்யுங் கணக்கு.

(ப-ரை.) உண்ணாது வைக்கும் - நுகராது வைக்கும், பெரும் பொருள் வைப்பு - பெரிய பொருளின் வைப்பானது, இன்னா துன்பமாம்; நண்ணா - உளம் பொருந்தாத, பகைவர் பகைவரது, புணர்ச்சி - சேர்க்கை, நனி இன்னா - மிகவுந் துன்பமாம்; கண் இல் ஒருவன் - விழியில்லாத ஒருவனது, வனப்பு - அழகு, இன்னா துன்பமாம்; ஆங்கு - அவ்வாறே, எண் இலான் - எண்ணூல் பயிலாதவன், செய்யும் கணக்கு – இயற்றும் கணக்கு, இன்னா - துன்பமாம் எ-று.

வைப்பு - புதைத்து வைப்பது, கண் - கண்ணோட்டமும் ஆம். எண் - கணிதம்; நூலுக்காயிற்று. எண்ணிலான் என்பதற்குச் சூழ்ச்சித் திறனில்லான் என்றும், செய்யுங் கணக்கு என்பதற்குச் செய்யுங்காரியம் என்றும் பொருள் கூறலும் ஆம் .

17. ஆன்றவிந்த சான்றோருட் பேதை புகலின்னா
மான்றிருண்ட போழ்தின் வழங்கல் பெரிதின்னா
நோன்றவிந்து வாழாதார் நோன்பின்னா வாங்கின்னா
ஈன்றாளை யோம்பா விடல்.

(ப-ரை.) ஆன்று - கல்வியால் நிறைந்து, அவிந்த - அடங்கிய, சான்றோர் உள் - பெரியோர் நடுவே, பேதை - அறிவில்லாதவன், பகல் - செல்லுதல், இன்னா - துன்பமாம்; மான்று - மயங்கி, இருண்ட போழ்தின் - இருண்டுள்ள காலத்தில், வழங்கல் - வழிச் செல்லுதல், பெரிது இன்னா - மிகவுந் துன்பமாம்; நோன்று (துன்பங்களைப்) பொறுத்து, அவிந்து - (மனம்) அடங்கி, வாழாதார் - வாழாமாட்டாதவர், நோன்பு - நோற்றல், இன்னா - துன்பமாம்; ஆங்கு - அவ்வாறே, ஈன்றாளை - பெற்ற தாயை, ஓம்பாவிடல் - காப்பாற்றாமல் விடுதல், இன்னா துன்பமாம், எ-று.

ஆன்று : ஆகல் என்பதன் மரூஉவாகிய ஆல் என்னும் பகுதியடியாகப் பிறந்தது. குணங்களால் நிறைந்து என்று கூறலும் ஆம். அவிந்த - ஐம்புலனும் அடங்கிய; பெரியோர்பாற் பணிந்த என்றுமாம். ஆன்றவிந் தடங்கிய கொள்கைச் சான்றோர்' என்னும் புறப்பாட்டும்,அதனுரையும் நோக்குக. மான்று - மால் என்பது திரிந்து நின்ற தெனினும் ஆம். பொழுது என்பதன் மரூஉ. ஓம்பா : ஈறு கெட்டது.

18. உரனுடையா னுள்ள மடிந்திருத்த லின்னா
மறனுடை யாளுடையான் மார்பார்த்த லின்னா
சுரமரிய கானஞ் செலவின்னா வின்னா
மனவறி யாளர்1தொடர்பு.

(பாடம்) 1. அகம்வறியாளர்.

(ப-ரை.) உரன் உடையான் - திண்ணிய அறிவுடையவன். உள்ளம் மடிந்து இருத்தல் - மனமடித்திருத்தல், இன்னா - துன்பமாம்; மறன் உடை - வீரமுடைய, ஆள் உடையான் – ஆட்களை யுடையான், மார்பு ஆர்த்தல் - மார்பு தட்டுதல், இன்னா - துன்பமாம்; சுரம் - அருநெறியாகிய, அரிய - இயங்குதற்கரிய, கானம் - காட்டின் கண், செலவு - செல்லுதல், இன்னா - துன்பமாம்; மனம் வறியாளர்- மன வறுமை யுடையாரது, தொடர்பு - சேர்க்கை, இன்னா - துன்பமாம். உரன் - திண்ணிய அறிவாதலை ‘உரனென்னுந் தோட்டியான்' என்னுங் குறட்குப் பரிமேலழகர் உரைத்த உரையா னறிக. மார்பு ஆர்த்தல் - மார்பு தட்டிப் போர்க்கெழுதல்; காரணம் காரியத்திற்காயிற்று. வீரரையுடையான் தானே போர்க்குச் செல்லுதல் வேண்டா என்றபடி; வலிதிற் செல்லுதல் எனினும் ஆம். மனவறியாளர் மனநிறை வில்லாதவர்; புல்லிய எண்ணமுடையார் எனினும் ஆம்.

19. குலத்துப் பிறந்தவன் கல்லாமை யின்னா
நிலத்திட்ட நல்வித்து நாறாமை யின்னா
நலத்தகையார் நாணாமை யின்னாவாங் கின்னா
கலத்தில் குலமில் வழி.

(ப-ரை.) குலத்துப் பிறந்தவன் - நற்குடியிற் பிறந்தவன், கல்லாமை - கல்லாதிருத்தல், இன்னா - துன்பமாம்; நிலத்து இட்ட - பூமியில் விதைத்த, நல்வித்து - நல்ல விதைகள், நாறாமை முளையாமற் போதல், இன்னா - துன்பமாம்; நலம் தகையார் தன்மையாகிய அழகினையுடைய மகளிர், நாணாமை - நாணின்றி யொழுகுதல், இன்னா - துன்பமாம்; ஆங்கு - அவ்வாறே, குலம் இல்வழி - ஒவ்வாத குலத்திலே, கலத்தல் - மணஞ் செய்து கலத்தல், இன்னா - துன்பமாம் எ-று.

மகளிர்க்கு நாணம் சிறந்ததென்பது ‘உயிரினுஞ் சிறந்தன்று நாணே' என்னும் தொல் காப்பியத்தானு மறியப்படும். நலத்தகையார் நாணாமை என்பதற்கு நற்குணமுடைய ஆடவர் பழிபாவங்கட்கு அஞ்சாமை எனப் பொருள் கூறுவாருமுளர். மணஞ்செய்வார் ஆராய வேண்டியவற்றுள் குடியொப்புக் காண்டலும் ஒன்று : "கொடுப்பினன் குடைமையும் குடிநிரலுடைமையும், வண்ண முந் துணையும் பொரீஇ யெண்ணா, தெமியேத் துணிந்த வேமஞ்சா லருவினை" என்னுங் குறிஞ்சிப் பாட்டடிகள் ஈண்டு நோக்கற்பாலன.

20. மாரிநாட் கூவுங் குயிலின் குரலின்னா
வீர மிலாளர் கடுமொழிக் கூற்றின்னா
மாரி வளம்பொய்ப்பி னூர்க்கின்னா வாங்கின்னா
மூரி யெருத்தா லுழவு

(ப-ரை.) மாரி நாள் - மழைக்காலத்தில் , கூவும் - கூவுகின்ற, குயிலின் குரல் - குயிலினது குரலோசை, இன்னா - துன்பமாம்; ஈரம இலாளர் - அன்பில்லாதவரது, கடுமொழி கூற்று கடிதாகிய சொல், இன்னா - துன்பமாம்; மாரி வளம் பொய்ப்பின் - மழை வளம் பொய்க்குமாயின், ஊர்க்கு - உலகிற்கு, இன்னா துன்பமாம்; ஆங்கு - அவ்வாறே, மூரி எருத்தால் - மூரியாகிய எருதால், உழவு - உழுதல்; இன்னா - துன்பமாம் எ-று.

வீரமிலாளர் என்று கொள்ளலும் ஆம். மொழிக்கூற்று : ஒருபொருளிருசொல்; மொழியின் பகுதியுமாம். மழையாகிய வளம் என்க; மழையினது வளம் எனலுமாம். பொய்த்தல் - இல்லையாதல்; ‘விண்ணின்று பொய்ப்பின்' என்பது திருக்குறள். ‘மாரி பொய்ப்பினும்' என்பது புறம். மூரி யெருத்து : இரு பெயரொட்டு. வலிமை மிக்க எருதுமாம். ‘எருமையு மெருதும் பெருமையுஞ் சோம்பும் வலியு முரணு நெரிவு மூரி என்பது பிங்கலம். கட்டுக் கடங்காத காளையால் உழுதல் துன்பம் என்பதாம் முதிர்ந்த எருதால் என்று பொருள் கூறுவாரு முளர்.

21. ஈத்த வகையா னுவவாதார்க் கீப்பின்னா
பாத்துண லில்லா ருழைச்சென் றுணலின்னா
மூத்த விடத்துப் பிணியின்னா வாங்கின்னா
ஓத்திலாப் பார்ப்பா னுரை.

(ப-ரை.) ஈத்த வகையால் - கொடுத்த அளவினால், உவவாதார்க்கு - மகிழாதவர்க்கு, ஈப்பு கொடுத்தல், இன்னா துன்பமாம்; பாத்து உணல் - பகுத்து உண்ணுதல், இல்லார் உழை இல்லாதவரிடத்தில், சென்று - போய், உணல் - உண்ணுதல், இன்னா - துன்பமாம்; மூத்த இடத்து - முதுமையுற்ற பொழுதில், பிணி - நோய் உண்டாதல், இன்னா - துன்பமாம்; ஆங்கு அவ்வாறே, ஓத்து இலா - வேதத்தை ஓதுதல் இல்லாத, பார்ப்பான் - பார்ப்பானுடைய, உரை - சொல், இன்னா துன்பமாம் எ-று. ஈந்த வென்பது வலித்தலாயிற்று. உவவாதார்க் கீப்பின்னா என்பதனை, ‘இன்னா திரக்கப்படுத லிரந்தவ ரின்முகங் காணுமளவு' என்னுங் குறளுடன் பொருத்திக் காண்க. பாத்துணல் - தென்புலத்தார் முதலாயினார்க்கும், துறந்தார் முதலாயினார்க்கும் பகுத்துண்ணுதல். பாத்து - பகுத்து என்பதன் மரூஉ ஓத்து - ஓதப்படுவது; வேதம்.

22. யானையின் மன்னரைக் காண்ட னனியின்னா
ஊனைத்தின் றூனைப் பெருக்குதல் முன்னின்னா
தேனெய் புளிப்பிற் சுவையின்னா வாங்கின்னா
கான்யா1றிடையிட்ட வூர்.

(பாடம்) 1.கானாறு.

(ப-ரை.) யானைஇல் - யானைப்படையில்லாத, மன்னரை - அரசரை, காண்டல் - பார்த்தல், நனி இன்னா - மிகவுந் துன்பமாம்; ஊனைத் தின்று (பிறிதோர் உயிரின்) ஊனை உண்டு, ஊனை (தன்) ஊனை, பெருக்குதல் - வளர்த்தல், முன் இன்னா மிகவுந் துன்பமாம்; தேன் நெய் - தேனும் நெய்யும், புளிப்பின் புளித்துவிட்டால், சுவை - (அவற்றின்) சுவை, இன்னா - துன்பமாம், ஆங்கு - அவ்வாறே, கான்யாறு - காட்டாறு, இடை இட்ட இடையிலே உளதாகிய, ஊர் - ஊரானது, இன்னா - துன்பமாம் எ-று.

‘யானையில் மன்னரைக் கண்டால் நனியின்னா' என்றாரேனும் அரசர் படையில் யானையில்லாதிருத்தல் இன்னா என்பது கருத்தாகக் கொள்க. ‘படைதனக்கு யானை வனப்பாகும்' என்பது சிறுபஞ்சமூலம். இனியவை நாற்பதிலுள்ள ‘யானையுடைய படைகாண்டன் மிகவினிதே ஊனைத்தின் றூனைப் பெருக்காமை முன்னினிதே, கான்யாற்றடைகரை யூரினி தாங்கினிதே, மானமுடையார் மதிப்பு என்னுஞ் செய்யுளுடன் இதனை ஒப்பு நோக்குக.

23. சிறையில்லாத மூதூரின் வாயில்காப் பின்னா
துறையிருந் தாடை கழுவுத லின்னா
அறைபறை யன்னவர்2சொல்லின்னா வின்னா
நிறையில்லான் கொண்ட தவம்.

2. அறைபறை யாயவர்.

(ப-ரை.) சிறை இல்லா - மதில் இல்லாத, மூதூரின் பழைமையாகிய ஊரினது, வாயில் காப்பு - வாயிலைக் காத்தல், இன்னா - துன்பமாம்; துறை இருந்து - நீர்த்துறையிலிருந்து, ஆடை கழுவுதல் - ஆடைதோய்த்து மாசுபோக்குதல், இன்னா துன்பமாம்; அறை - ஒலிக்கின்ற, பறை அன்னவர் - பறைபோன்றாரது, சொல் - சொல்லானது, இன்னா துன்பமாம்; நிறை இல்லான் - (பொறிகளைத் தடுத்து) நிறுத்துந் தன்மையில்லாதவன் - கொண்ட - மேற்கொண்ட, தவம் தவமானது, இன்னா - துன்பமாம்; எ-று.

நீர்த்துறையில் ஆடை யொலித்தல் புரியின், நீர் வழி நோயணுக்கள் பரவி இன்னல் விளைக்குமாகலின், "துறையிலிருந்தாடை கழுவுதலின்னா" என்றார். இனம் பற்றிப் பிற தூயதன்மை புரிதலுங் கொள்க. அறைபறை யன்னவர் - தாம் கேட்ட மறைக்கப்படும் பொருளினை யாண்டும் வெளிப்படுத்து மியல்பினர்; ‘அறைபறை யன்னர் கயவர்தாங் கேட்ட, மறைபிறர்க் குய்த்துரைக் கலான்' என்றார் பொய்யில் புலவரும்.

24. ஏமமில் மூதூ ரிருத்தன் மிகவின்னா
தீமை யுடையா ரயலிருத்த னன்கின்னா
காமமுதிரி னுயிர்க்கின்னா1வாங்கின்னா
யாமென் பவரொடு நட்பு.

(பாடம்) 1. உயிர்க்கின்னாது.

(ப-ரை.) ஏமம் இல் - காவல் இல்லாத, மூதூர் - பழைய ஊரிலே, இருத்தல் - வாழ்தல், மிக இன்னா - மிகவுந் துன்பமாம்; தீமை உடையார் - தீச்செய்கையுடையவரது, அயல் இருத்தல் பக்கத்திலேயிருத்தல், நன்கு இன்னா - மிகவும் துன்பமாம்; காமம் முதிரின் - காமநோய் முற்றினால், உயிர்க்கு இன்னா உயிர்க்குத் துன்பமாம்; ஆங்கு - அவ்வாறே, யாம் என்பவரொடு யாமென்று தருக்கியிருப்பவரோடு செய்யும், நட்பு - நட்பானது, இன்னா - துன்பமாம் எ-று.

ஏமம் - மதிற்காவலும், அரசின் காவலும் ஆம். அயலிருத்தல் என்றமையால் அவரைச் சேர்ந்தொழுகுதல் கூறவேண்டாதாயிற்று. காமம் உயிரைப்பற்றி வருத்து மென்பதனைக் ‘காமமு நாணு முயிர் காவாத் தூங்குமென், னோனா வுடம்பி னகத்து' என்னும் முப்பாலானு மறிக.

25. நட்டா ரிடுக்கண்கள் காண்டல் நனியின்னா2
ஒட்டார் பெருமிதங் காண்டல் பெரிதின்னா3
கட்டில்லா மூதூ ருறையின்னா வாங்கின்னா
நட்ட கவற்றினாற் சூது.

2. இடுக்க ணனிகண்டா னன்கின்னா.
3. கண்டாற் பெரிதின்னா

(ப-ரை.) நட்டார் - நட்புக் கொண்டவருடைய, இடுக்கண்கள் துன்பங்களை, காண்டல் - பார்த்தல், நனி இன்னா - மிகவுந் துன்பமாம்; ஒட்டார் - பகைவரது, பெருமிதம் - செருக்கை, காண்டல் - பார்த்தல், பெரிது இன்னா - மிகவுந் துன்பமாம்; கட்டு இல்லா - சுற்றமாகிய கட்டு இல்லாத, மூதூர் - பழையவூரிலே, உறை வாழ்தல், இன்னா - துன்பமாம்; ஆங்கு அவ்வாறே, நட்ட - நட்பாகக் கொள்ளப்பட்ட, கவற்றினால் கவற்றைக் கொண்டு ஆடுகின்ற, சூது - சூதாட்டம், இன்னா - துன்பமாம் எ-று.

கட்டு - கட்டுப்பாடும் ஆம் உறை : முதனிலைத் தொழிற் பெயர். நட்ட என்றது விருப்புடன் அடிப்பட்டுப் பழகிய என்றபடி கவறு - பாய்ச்சி; ஆவது தாயக்கட்டை, ஒரு சொல் வருவிக்கப்பட்டது.

26. பெரியாரோ டியாத்த தொடர்விடுத லின்னா
அரியவை செய்து மெனவுரைத்த லின்னா
பரியார்க்குத் தாமுற்ற கூற்றின்னா வின்னா
பெரியோர்க்குத் தீய செயல்.

(ப-ரை.) பெரியாரோடு - பெரியவருடன், யாத்த - கொண்ட, தொடர் - தொடர்ச்சியை, விடுதல் - விடுவது, இன்னா - துன்பமாம்; அரியவை - செய்தற்கரிய காரியங்களை, செய்தும் - செய்து முடிப்போம், என உரைத்தல்- என்று சொல்லுதல், இன்னா - துன்பமாம்; பரியார்க்கு - (தம்மிடத்தில்) அன்பு கொள்ளாதவர்க்கு, தாம் உற்ற - தாம் அடைந்த துன்பங்களைக் கூறும்; கூற்று - சொல், இன்னா - துன்பமாம்; பெரியார்க்கு பெருமையுடையார்க்கு, தீய செயல் - தீயனவற்றைச் செய்தல், இன்னா - துன்பமாம் எ-று.

பெரியார் தொடர் விடுதல் இன்னா என்பதனைப் ‘பல்லார் பகை கொளலிற் பத்தடுத்த தீமைத்தே நல்லார் தொடர்கை விடல்' என்னுந் திருக்குறளானு மறிக. பெரியார் - ஈண்டுக் கல்வியறிவு நற்குண நல்லொழுக்கங்களிற் சிறந்த நல்லோர். குற்றியலிகரம் அலகு பெறாதாயிற்று. ‘அரியவை செய்துமென உரைத்தல் இன்னா' என்றது தாம் செய்யக் கருதிய அரிய செயல்களைச் செயலால் வெளிப்படுத்தலன்றி உரையாற் கூறுதல் தக்கதன்று என்றபடி; தம்மாற் செய்ய வியலாதவற்றைச் செய்து தருவேமெனப் பிறர்க்கு வாக்களிப்பது இன்னாவாம் எனப் பொருள் கூறினும் அமையும் செய்தும் : தன்மைப் பன்மை யெதிர்கால வினைமுற்று; இறந்தகால முற்றும் ஆம். பரிதல் - அன்பு செய்தல் : இரங்குதலுமாம். பெரியார்க்குத் தீங்கு செயல் இன்னா என்பதனை ‘எரியாற் சுடப்படினு முய்வுண்டா முய்யார், பெரியார்ப் பிழைத்தொழுகு வார்' என்னும் வாயுறைவாழ்த் தானுமறிக. உற்ற, தீய என்பன முறையே தெரிநிலையும் குறிப்புமாய வினைப்பெயர்கள்.

27. பெருமை யுடையாரைப் பீடழித்த லின்னா
கிழமை யுடையார்க்1களைந்திடுத லின்னா
வளமை யிலாளர் வனப்பின்னா வின்னா
இளமையுண் மூப்புப் புகல்.

(பாடம்) 1. கிழமை யுடையாரை.

(ப-ரை.) பெருமை உடையாரை - பெருமையுடையவரை, பீடு அழித்தல் - பெருமை யழியக் கூறல், இன்னா - துன்பமாம்; கிழமை உடையார் - உரிமை உடையவரை, களைந்திடுதல் - நீக்கி விடுதல், இன்னா - துன்பமாம்; வளமை இலாளர் - செல்வமில்லாதவருடைய, வனப்பு - அழகு, இன்னா - துன்பமாம்; இளமையுள் - இளமைப் பருவத்தில், மூப்பு - மூதுமைக்குரிய தன்மைகள், புகல் உண்டாதல், இன்னா - துன்பந் தருவதாகும் எ-று.

பீடு அழித்தல் என்னும் இருசொல்லும் ஒரு சொன்னீர்மையெய்தி இரண்டாவதற்கு மடிபாயின. பீடழித்தலாவது பெருமையுளதாகவும் அதனையிலதாக்கிக் கூறுதல் கிழமையுடையார் - பழையராக வரும் அமைச்சர் முதலாயினார்; நண்பரும் ஆம். கிழமையுடையாரைக் கீழ்ந்திடுதலின்னா என்று பாடங் கொள்ளுதல் சிறப்பு;பழமையெனப்படுவ தியாதெனின் யாதுங்கிழமையைக் கீழ்ந்திடா நட்பு' என்னும் திருக்குறளுங் காண்க. வளமை வண்மையுமாம்.

28. கல்லாதா னூருங் கலிமாப் பரிப்பின்னா
வல்லாதான் சொல்லு முரையின் பயனின்னா
இல்லார்வாய்ச் சொல்லி னயமின்னா வாங்கின்னா
கல்லாதான் கோட்டி கொளல்.

(ப-ரை.) கல்லாதான் - (நடத்த வேண்டிய முறையைக்) கல்லாதவன், ஊரும் – ஏறிச் செலுத்தும், கலிமா - மனஞ்செருக்கிய குதிரை, பரிப்பு - (அவனைச்) சுமந்து செல்லுதல், இன்னா துன்பமாம்; வல்லாதான் - கல்வி யில்லாதவன், சொல்லும் சொல்லுகின்ற, உரையின் பயன் - சொல்லின் பொருள், இன்னா துன்பமாம்; இல்லார் - செல்வ மில்லாதவருடைய, வாய்ச் சொல்லின் - வாயிலிருந்து வரும் சொல்லினது, நயம் - நயமானது, இன்னா - துன்பமாம்; ஆங்கு - அவ்வாறே, கல்லாதவன் - கல்வியில்லாதவன், கோட்டி கொளல் - கற்றவ ரவையில் ஒன்றைக் கூறுதல், இன்னா - துன்பமாம் எ-று.

கலி - ஆரவாரமும் ஆம். வல்லாதான் ஒன்றனைச் செய்ய மாட்டாதான் எனினும் அமையும். இல்லார் வாய்ச்சொல்லின் நயமின்னா என்பதனை‘நற்பொருள் நன்குணர்ந்து சொல்லினும் நல்கூர்ந்தார் சொற்பொருள் சோர்வு படும்' என்னுந் தமிழ்மறை யானுமறிக. கோட்டிகொளல் : ஒருசொல் ; அவையின்கண் பேசுதல் என்னும் பொருளது;‘அங்கணத்துளுக்க...... கோட்டி கொளல்' என்பதுங் காண்க

29. குறியறியான் மாநாக1மாட்டுவித்த லின்னா
தறியறியா2னீரின்கட் பாய்ந்தாட3லின்னா
அறிவறியா மக்கட் பெறலின்னா வின்னா
செறிவிலான் கேட்ட மறை.

(பாடம்) 1. மானாகம்,
2. இன்னா தறிவறியான்.
3. கீழ்நீர்ப்பாய்ந்தாடுதல்.

(ப-ரை.) குறியறியான் - (பாம்பாட்டுதற்குரிய மந்திர முதலியவற்றின்) முறைகளை அறியாதவன், மாநாகம் - பெரிய பாம்பினை, ஆட்டுவித்தல் - ஆடச்செய்தல், இன்னா - துன்பமாம்; தறி அறியான் - உள்ளிருக்கும் குற்றியை யறியாமல், நீரின்கண் - நீரில் பாய்ந்து, ஆடல் - குதித்து விளையாடுதல் இன்னா - துன்பமாம். அறிவு அறியா - அறிய வேண்டுவனவற்றை அறியமாட்டாத, மக்கள் - பிள்ளைகளை பெறல் - பெறுதல், இன்னா - துன்பமாம்; செறிவு இலான் அடக்கம் இல்லாதவன், கேட்ட மறை - கேட்ட இரகசியம், இன்னா - துன்பமாம் எ-று.

தறி - குற்றி; கட்டை, அறிவறியான் என்னின் அறிவு வறியனாயினான் : ஆவது கல்லா இளமையன் என்க. ‘அறிகொன்று' என்புழிப்போல, ஈண்டு அறியென்பது முதனிலைத் தொழிற்பெயர். அறிவறியா மக்கள் - அறிவேண்டுவன அறியமாட்டாத மக்கள் : ‘அறிவறிந்த மக்கள்' என்பதற்குப் பரிமேலழகர் கூறிய பொருளை நோக்குக. செறிவு - அடக்கம் : ‘செறிவறிந்து சீர்மை பயக்கும்' என்னுங் குறளில் செறிவு இப்பொருட்டாதல் காண்க : அடக்கமில்லாதவன் மறையினை வெளிப்படுத்தலின் ‘கேட்ட மறையின்னா' என்றார்.

30. நெடுமர நீள்கோட் டுயர்பாய்த லின்னா4
கடுஞ்சின வேழத் தெதிர்சேற லின்னா
ஒடுங்கி யரவுறையு மில்லின்னா வின்னா
கடும்புலி வாழு மதர்.

4. நெடுமார்நீள் கோட்டுயர் பாஅய்த லின்னா

(ப-ரை.) நெடுமரம் - நெடிய மரத்தினது, நீள் கோட்டு - நீண்ட கிளையின், உயர் - உயரத்திலிருந்து, பாய்தல் கீழே குதித்தல், இன்னா - துன்பமாம்; கடும் சினம் - மிக்க கோபத்தினையுடைய, வேழத்து எதிர் - யானையின் எதிரே, சேறல் - செல்லுதல், இன்னா - துன்பமாம்; அரவு - பாம்பு, ஒடுங்கி உறையும் - மறைந்து வசிக்கின்ற, இல் - வீடானது, இன்னா - துன்பமாம்; கடும் புலி - கொடிய புலிகள், வாழும் அதர் - வாழ்கின்ற வழியானது, இன்னா துன்பமாம் எ-று.

கோட்டுயர் பாய்தல் என்பதற்குக் கோட்டின் நுனியிலேறி யதோடமையாது மேலும் பாய்ந்து சேறல் என்று பொருள் கூறலுமாம்; நுனிக்கொம்ப ரேறினா ரஃதிறந் தூக்கி, னுயிர்க்கிறுதி யாகிவிடும்' என்பது ஈண்டு நோக்கற்பாலது. நெடுமர நீள் கோட்டுயர் பாய்தல் முதலிய நான்கற்கும், ஓட்டென்னும் அணிபற்றி, முறையே தம் வலியளவறியாது பெரிய வினைமேற் சேறலும், வலியார்க்கு மாறேற்றலும், உடம்பாடிலாத உட்பகையுடன் வாழ்தலும், பகைக்கெளியராம்படி நெறியலா நெறியிற்சேறலும் இன்னாவாமெனப் பொருள்கோடலும் பொருந்துமாறு காண்க

31. பண்ணமையா யாழின்கீழ்ப் பாடல் பெரிதின்னா
எண்ணறியா மாந்தர்1ஒழுக்குநாட் கூற்றின்னா
மண்ணின் முழவி னொலியின்னா வாங்கின்னா
தண்மை யிலாளர்2பகை.

(பாடம்) 1.எண்ணறிய மாந்தர்.
2.தன்மையிலாளர்.

(ப-ரை.) பண் அமையா - இசை கூடாத, யாழின் கீழ் - யாழின் கீழிருந்து, பாடல் - பாடுதல், பெரிது இன்னா மிகவுந்துன்பமாம்; எண் அறியா மாந்தர் - குறி நூல் (சோதிடம்) அறியாத மாக்கள், ஒழுக்கு நாள் கூற்று - ஒழுகுதற்குரிய நாள் கூறுதல், இன்னா துன்பமாம்; மண் - இல் - மார்ச்சனையில்லாத, முழவின் - மத்தளத்தினது, ஒலி - ஓசை, இன்னா - துன்பமாம்; ஆங்கு - அவ்வாறே, தண்மை இலாளர் - தண்ணிய குணம் இல்லாதவரது, பகை - பகையானது, இன்னா - துன்பமாம் எ-று.
பண் என்பதனை முதனிலைத் தொழிற்பெயராகக்கொண்டு, இசைக்கரணம் எட்டனு ளொன்று என்னலுமாம் ஒழுகுதற்குரிய நாளாவது கருமங்கட்கு விதிக்கப்பட்ட நாள். நற்கணமுடையார் பகையிடத்தும் இனியன செய்தலும், நற்குணமில்லார் நட்பிடத்தும் இன்னா செய்தலும் உடையாராகலின் தண்மையிலாளர் பகை இன்னா வெனப்பட்டது; தீயோர்பால் பகையும் நண்புமின்றி நொதுமலாக விருத்தல் வேண்டுமென அறிக.

32. தன்னைத்தான் போற்றா தொழுகுத னன்கின்னா
முன்னை யுரையார் புறமொழிக் கூற்றின்னா
நன்மை யிலாளர் தொடர்பின்னா வாங்கின்னா
தொன்மை யுடையார் கெடல்.

(ப-ரை.) தன்னைத்தான் - (ஒருவன்) தன்னைத்தானே, போற்றாது – காத்துக் கொள்ளாது, ஒழுகுதல் - நடத்தல், நன்கு இன்னா - மிகவுந் துன்பமாம்; முன்னை உரையார் - முன்னே சொல்லாமல், புறமொழிக் கூற்று - புறத்தே பழித்துரைக்கும் புறங்கூற்று, இன்னா - துன்பமாம்; நன்மை இலாளர் - நற்குணமில்லாதவரது, தொடர்பு - நட்பு, இன்னா - துன்பமாம்; ஆங்கு - அவ்வாறே, தொன்மை உடையார் - பழைமையுடையவர், கெடல் - கெடுதல், இன்னா - துன்பமாம் எ-று.
தன்னைத்தான் போற்றுதலாவது மனமொழி மெய்கள் தீயவழியிற் செல்லாது அடக்குதல். முன்னை-ஐ: பகுதிப்பொருள் விகுதி. உரையார் : முற்றெச்சம். மொழிக்கூற்று : ஒரு பொருளிருசொல் தொன்மையுடையார் கெடல் என்றது தொன்று தொட்டு மேம்பட்டு வரும் பழங்குடியினர் செல்வங் கெடுதல் என்றபடி.

33. கள்ளுண்பான் கூறுங் கருமப் பொருளின்னா
முள்ளுடைக் காட்டி னடத்த னனியின்னா1
வெள்ளம் படுமாக் கொலையின்னா வாங்கின்னா
கள்ள மனத்தார் தொடர்பு.

(பாடம்) 1. நடக்கி னனியின்னா.

(ப-ரை.) கள் உண்பான் - கட்குடிப்பவன், கூறும் - சொல்லுகின்ற, கருமப்பொருள் - காரியத்தின் பயன், இன்னா - துன்பமாம்; முள் உடை காட்டில் - முட்களையுடைய காட்டில், நடத்தல் - நடத்தலானது, நனி இன்னா - மிகவுந் துன்பமாம்; வெள்ளம் படு - வெள்ளத் திலகப்பட்ட, மா - விலங்கு, கொலை, - கொலையுண்டல், இன்னா - துன்பமாம்; ஆங்கு - அவ்வாறே, கள்ளம் மனத்தார் : வஞ்சமனத்தினை யுடையாரது, தொடர்பு - நட்பு, இன்னா துன்பமாம் எ-று.

மாக்கொலை - விலங்கைக் கொல்லுதல் எனினும், நீர்ப் பெருக்கிலகப்பட்டு வருந்தும் விலங்கைக் கரையேற வொட்டாது தடுத்துக் கொல்லுதல் இன்னாவாம் என்பது கருத்து.

34. ஒழுக்க மிலாளார்க் குறவுரைத்த2லின்னா
விழுத்தகு நூலும்3விழையாதார்க் கின்னா
இழித்த தொழிலவர் நட்பின்னா வின்னா
கழிப்புவாய் மண்டிலங் கொட்பு.

2. ஒழுக்கமிலாளர் குறைவுரைத்தல்
3. விழித்தகுநூலும்.

(ப-ரை.) ஒழுக்கம் இலாளர்க்கு - நல்லொழுக்கம் இல்லாதவரிடத்தே, உறவு உறைத்தல் - தமக்கு உறவுளதாகக் கூறுதல், இன்னா - துன்பமாம்; விழுத்தகு நூலும் - சீரிய நூலும், விழையாதார்க்கு - விரும்பிக் கல்லாதார்க்கு, இன்னா - துன்பமாம்; இழித்த தொழிலவர் - இழிக்கப்பட்ட தொழிலை யுடையாரது, நட்பு - கேண்மை, இன்னா - துன்பமாம்; கழிப்பு வாய் - நல்லாரால் கழிக்கப்பட்ட இடமாகிய, மண்டிலம் - நாட்டிலே, கொட்பு - திரிதல். இன்னா - துன்பமாம் எ-று.

ஒழுக்கமிலாளர் குறைவுரைத்தல் என்னும் பாடத்திற்கு ஒழுக்கமில்லாதவரை இழித்துரைத்தல் என்று பொருள் கொள்க. இழித்த தொழில் - அறிவுடையோராற் பழிக்கப்பட்ட தொழில் ஈற்றடிக்கு, ஒழுகக் குறைத்த மதியினது செலவு காண்டல் என்று பொருள் கூறலுமாம்.

35. எழிலி யுறைநீங்கி னீண்டையார்க் கின்னா
குழலி னினிய1மரத் தோசைநன் கின்னா
குழவிக ளுற்ற பிணியின்னா வின்னா
அழகுடையான் பேதை யெனல்.

(பாடம்) 1. குழலினிய

(ப-ரை.) எழிலி-மேகமானது, உறை நீங்கின்-நீரைச் சொரியாதாயின், ஈண்டையார்க்கு -இவ்வுலகத்திலுள்ளவர்களுக்கு, இன்னா-துன்பமாம்; குழலின் இனிய - புல்லாங்குழலைப் போலும் இனிய, மரத்து ஓசை - மரத்தினது ஓசை, நன்கு இன்னா மிகவுந் துன்பமாம்; குழவிகள் உற்ற-குழந்தைகள் அடைந்த, பிணி-நோயானது, இன்னா-துன்பமாம்; அழகு உடையான்-அழகினையுடையவன், பேதை எனல்-அறிவில்லாதவன் என்று சொல்லப்படுதல், இன்னா - துன்பமாம் எ-று.

உறை - நீர்த்துளி, ‘குழலினினிய மரத் தோசைநன்கின்னா' என்பதன் கருத்து [காற்று ஊடறுத்துச் செல்லுதலால் மரங்களினின் றெழும் ஓசை குழலிசை போலினிய தாயினும் பாராட்டப்படுவதின்று என்பது போலும்] குழலில் என்னும் பாடத்திற்குக் குழல் இல்லாத என்று பொருள் கூறிக்கொள்க.

36. பொருளிலான் வேளாண்மை காமுறுத லின்னா
நெடுமாட நீணகர்க் கைத்தின்மை ன்னா
வருமனை பார்த்திருந் தூணின்னா வின்னா
கெடுமிடங் கைவிடுவார் நட்பு.

(ப-ரை.) பொருள் இலான் - செல்வ மில்லாதவன், வேளாண்மை - (பிறர்க்கு) உதவி புரிதலை, காமுறுதல் - விரும்புதல், இன்னா - துன்பமாம்; நெடு மாடம் - நெடிய மாடங்களையுடைய, நீள் நகர் - பெரிய நகரத்திலே, கைத்து இன்மை - பொருளின்றி யிருத்தல், இன்னா - துன்பமாம்; வரு மனை - வரப்பட்ட மனையிலுள்ளாரை, பார்த்திருந்து - எதிர்நோக்கியிருந்து, ஊண் உண்ணுதல், இன்னா - துன்பமாம்; கெடும் இடம் - வறுமையுள்ள இடத்தில், கைவிடுவார் - கைவிட்டு நீங்குவாரது, நட்பு கேண்மை, இன்னா - துன்பமாம் எ-று.

வேளாண்மை - உபகாரம் வருமனை பார்த்திருந்தூண் என்றது பிறர் மனையை அடைந்து அம் மனைக்குரியாரது செவ்வி நோக்கி யிருந்துண்டல் ஏன்றபடி. கெடுமிடங் கைவிடுவார் நட்பு இன்னா வென்பதனைக் ‘கெடுங்காலைக் கைவிடுவார் கேண்மை யடுங்காலை யுள்ளினு முள்ளஞ் சுடும' என்னுந் திருக்குறளானு மறிக.

37. நறிய மலர்பெரிது நாறாமை யின்னா
துறையறியா னீரிழிந்து1போகுத லின்னா
அறியான் வினாப்படுத லின்னாவாங் கின்னா
சிறியார்மேற் செற்றங் கொளல்.

(பாடம்) 1. துறையறியா நீரிழிந்து

(ப-ரை.) நறிய மலர் - நல்ல மலரானது, பெரிய நாறாமை - மிகவும் மணம் வீசாதிருத்தல், இன்னா - துன்பமாம்; துறை அறியான் - துறையை அறியாதவன், நீர் இழிந்து போகுதல் - நீரில் இறங்கிச் செல்லுதல், இன்னா - துனபமாம்; அறியான் (நூற்பொருள்) அறியாதவன், வினாப்படுதல் - (அறிவுடையோரால்) வினாப்படுதல், இன்னா - துன்பமாம்; ஆங்கு - அவ்வாறே, சிறியோர் மேல் - சிறியவர்மீது, செற்றங் கொளல் - சினங் கொள்ளுதல், இன்னா - துன்பமாம் எ-று.

நறிய - நல்ல, அழகுடைய, துறை - நீரில் இறங்குதற்கும் ஏறுதற்குமுரிய வழி அறியா நீர் என்பது பாடமாயின் அறியப்படாத நீர் என்க. சிறியார் - வெகுளி செல்லுதற்குரிய எளிமையுடையார்; குழவிப் பருவத்தினருமாம்.

38. பிறன்மனையாள் பின்னோக்கும் பேதைமை யின்னா
மறமிலா மன்னர் செருப்புகுத லின்னா
வெறும்புறம் வெம்புரவி யேற்றின்னா வின்னா
திறனிலான் செய்யும் வினை.

(ப-ரை.) பிறன் மனையான் பின் நோக்கும்-பிறன் மனைவியைக் காமுற்றுப் பின்றொடரக் கருதும். பேதைமை-அறிவின்மை, இன்னா-துன்பமாம்; மறம் இலா மன்னர்-வீரமில்லாத அரசர், செரு புகுதல்-போர்க்களத்திற் செல்லுதல், இன்னா துன்பமாம்; வெம் புரவி-விரைந்த செலவினையுடைய குதிரையினது, வெறும் புறம்-கல்லணை யில்லாத முதுகில், ஏற்று-ஏறுதல், இன்னா-துன்பமாம்; திறன் இலான்-செய்யுங் கூறு பாடறியாதவன், செய்யும் வினை-செய்யுங் காரியம், இன்னா துன்பமாம் எ-று.

புரவியின் புறமென்று மாற்றுக. திறன் - அறிந்தாற்றிச் செய்யும் வகை.

39. கொடுக்கும் பொருளில்லான் வள்ளன்மை யின்னா
கடித்தமைந்த பாக்கினுட் கற்படுத லின்னா
கொடுத்து விடாமை கவிக்கின்னா வின்னா
மடுத்துழிப் பாடா விடல்.

(ப-ரை.) கொடுக்கும்-கொடுத்தற்குரிய, பொருள் இல்லான்-பொருளில்லாதவனுடைய, வள்ளன்மை-ஈகைத் தன்மை, இன்னா-துன்பமாம்; கடித்து அமைந்த-கடித்தற்கு அமைந்த, பாக்கினுள்-பாக்கில், கல் படுதல்-கல் இருத்தல், இன்னா-துன்பமாம்; கவிக்கு-புலவனுக்கு, கொடுத்து விடாமை-பரிசில் கொடுத்துனுப்பாமை, இன்னா-துன்பமாம்; மடுத்துழி-தடைப் பட்ட விடத்து, பாடா விடல்-பாடாது விடுதல், இன்னா-(பாடும் புலவனுக்குத்) துன்பமாம் எ-று.

கடித்து; கடிக்க என்பதன் றிரிபு; பிளந்து எனினுமாம். கல் என்றது பாக்கிற் படுவதொரு குற்றம். மடுத்துழி - பொருள் பெற்ற விடத்தில் எனினுமாம். பாடா : ஈறு கெட்ட எதிர்மறை வினையெச்சம்.

40. அடக்க முடையவன் மீளிமை யின்னா
துடக்க மிலாதவன் றற்செருக் கின்னா
அடைக்கலம் வவ்வுத லின்னாவாங் கின்னா
அடக்க வடங்காதார் சொல்.

(ப-ரை.) அடக்கம் உடையவன் - (ஐம்பொறிகளை) அடக்குதலுடையவனது, மீளிமை - தறுகண்மை, இன்னா - துன்பமாம். துடக்கம் இலாதவன் - முயற்சியில்லாதவன், தற்செருக்கு – தன்னையே மதிக்கும் மதிப்பு, இன்னா - துன்பமாம்; அடைக்கலம் பிறர் அடைக்காமாக வைத்த பொருளை, வவ்வுதல் - கவர்ந்து கொள்ளுதல், இன்னா - துன்பமாம்; ஆங்கு - அவ்வாறே, அடக்க (அறிவுடையோர்) அடக்கவும், அடங்காதார் - அடங்கு தலில்லாதவர்க்குக் கூறும், சொல் - சொல்லானாது, இன்னா - துன்பமாம் எ-று.

மீளிமை - பெருமிதமுமாம். துடக்கம் - வளைவு; உடல் வளைந்து வினைசெய்தற் கேற்ற முயற்சியை உணர்த்திற்று; தொடக்கம் என்று கொண்டு யாதானும் நற்கருமஞ் செய்யத் தொடங்குதல் என்றுரைப்பினுமாம். அடங்காதார் சொல் - அடங்காதார் அவையிற் கூறுஞ் சொல் எனினும் ஆம்.

இன்னா நாற்பது உரையுடன்

முற்றும்.

No comments:

Post a Comment